ஜி.எஸ்.டி. எனும் சரக்கு மற்றும் சேவை வரியை அனைத்து விஷயங்களிலும் புகுத்தியிருக்கிறது மத்திய அரசு. இந்த நிலையில், கல்வியிலும் ஜி.எஸ்.டி.யை கொண்டுவந்துள்ளது தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டிலுள்ள அண்ணா பல்கலைக்கழகம். இனி, பொறியியல் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் தங்களுக்கான சான்றிதழ்களைப் பெறுவதற்கு ஜி.எஸ்.டி. கட்டணமாக 18 சதவீதம் செலுத்த வேண்டும் என அறிவித்திருக்கிறது.
இதுகுறித்து அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார் அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுகள் கட்டுப்பாட்டுத் துறையின் கட்டுப்பாட்டு அதிகாரி வெங்கடேசன். அவர் அனுப்பியுள்ள அறிக்கையில், “அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள், தங்களுடைய கல்விக் கட்டணம், செமஸ்டர் கட்டணம், டிரான்ஸ்கிரிப்ட் சான்றிதழ் கட்டணம், மறுமதிப்பீடு கட்டணம், தர வரிசை, ப்ரவிசனல் சான்றிதழ் பெறும் கட்டணம் தவிர, பட்டப்படிப்பு முடிந்து பட்டமளிப்பு சான்றிதழ் பெறும்போது 18 சதவீதம் ஜி.எஸ்.டி. கட்டணம் செலுத்த வேண்டும். மேலும், டூப்ளிகேட் சான்றிதழ் பெறுதல், இடமாற்று சான்றிதழ் பெறுதல், சான்றிதழின் உண்மைத் தன்மை சான்றிதழ் பெறுதல், செமஸ்டர் தேர்வுக்கான விடைத்தாள் நகல் பெறுதல் உள்ளிட்டவைகளுக்கும் ஜி.எஸ்.டி. வரி செலுத்த வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு மாணவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.