கடந்த 2016- ஆம் ஆண்டு டி.என்.பி.எஸ்.சி. நடத்திய குரூப்- 4 தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் இன்று (10/11/2021) விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், "டி.என்.பி.எஸ்.சி. குரூப்- 4 தேர்வில் திட்டமிட்டு முறைகேடு நடத்தப்பட்டுள்ளது வெட்கக்கேடான நிகழ்வு. முறைகேடு பிரச்சனையால் தேர்தல் ரத்தாகும் போது, தேர்வு மட்டும் ரத்து செய்யப்படாதது ஏன்? ஏடிஎம் மையங்களில் நிரப்ப பணம் எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. பல லட்சம் பேரின் எதிர்காலம் தொடர்பான விடைத்தாள்களுக்கு போதிய பாதுகாப்பு தராதது ஏன்? முறைகேடு செய்த தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதியினர் சரியாக இரண்டு தேர்வு மையங்களைத் தேர்வு செய்தது எப்படி?
குரூப்- 4 முறைகேடு மிகப்பெரும் மோசடி; இதற்கான விசாரணையை வேரில் இருந்து தொடங்க வேண்டும். டி.என்.பி.எஸ்.சி. மீது மக்கள் இழந்த நம்பிக்கையை மீட்டு கொண்டு வரும் வகையில் உரிய நடவடிக்கை தேவை. சரியான பொறுப்புகளில் சரியான, நேர்மையான நபர்களை நியமிக்கும் போது தவறுகள் தவிர்க்கப்படும்" என்று கூறிய நீதிபதிகள், இவ்வழக்கு தொடர்பான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.