திருச்சி மாவட்டம், லால்குடி அருகே திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் வாளாடி ஊராட்சியில் உள்ள மளிகைக் கடையில் மின்கசிவு காரணமாகத் தீப்பற்றியது. இதில் கடையில் இருந்த பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமானது.
வாளாடியைச் சேர்ந்த ஜெயக்குமார் மற்றும் அவரது மகன் பிரேம் ஆனந்த் (வயது 46) என்பவர் கடந்த இருபது வருடமாக ஈஸ்வரி என்ற பெயரில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். கடைக்குப் பின்புறம் இவருடைய வீடு அமைந்துள்ளது. இந்நிலையில் வீட்டின் மாடிப்படியில் தற்போது மராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது. அப்போது வெல்டிங் வைத்தபோது அதிலிருந்து ஏற்பட்ட தீப்பொறி மற்றும் மின்கசிவு காரணமாக அருகில் உள்ள அவரது மளிகைக் கடையில் தீப்பற்றியது.
இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயற்சி செய்தனர். கண்ணாடி பாட்டில்கள் வெடித்து சிதறியதால் பக்கத்தில் யாரும் நெருங்க முடியவில்லை. அதற்குள் தீ மளமளவென பரவ ஆரம்பித்தது. இது குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
அதைத் தொடர்ந்து, ஸ்ரீரங்கம், லால்குடி மற்றும் சமயபுரம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அனைத்தனர். தீயை அணைப்பதற்குள் கடையில் இருந்த பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமானது. இதன் மதிப்பு சுமார் 20 லட்சம் என கூறப்படுகிறது. இந்த தீ விபத்து குறித்து லால்குடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.