தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய வாரந்தோறும் புதன்கிழமைகளில் சிறப்பு குறைதீர்ப்பு முகாம்களை நடத்தி பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று விரைந்து நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும், பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களுக்கு சரியான முறையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்யவேண்டும் எனத் தமிழ்நாடு காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறார்கள்.
அதன்படி தமிழ்நாடு காவல்துறை கூடுதல் இயக்குநர் சங்கர் தலைமையில், திருச்சி மாநகர மற்றும் திருச்சி சரகத்திலுள்ள திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களின் குறைகளைத் தீர்க்கும் வகையிலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான தீர்வு கிடைக்கப் பெற்றதா என்று கண்டறியும் வகையில் மாபெரும் மக்கள் குறைதீர்ப்பு சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது.
இச்சிறப்பு முகாமில் திருச்சி மாநகரத்திலிருந்து 180 மனுக்களும் திருச்சி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, அரியலூர் மாவட்டங்கள் அடங்கிய திருச்சி சரகத்திலிருந்து 203 மனுக்கள் என மொத்தம் 383 மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்கள் கலந்து கொண்டார்கள். அவர்களிடம் தமிழக காவல்துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் & ஒழுங்கு), பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்தும் விசாரணை செய்தும் பெரும்பாலான மனுக்களில் 283 மனுக்களுக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட்டது
இச்சிறப்பு முகாமில் தமிழ்நாடு காவல்துறை கூடுதல் இயக்குநர் பேசுகையில், முதலமைச்சர் காவல்நிலையங்களில் பொதுமக்கள் தங்களது புகார்களை எந்த சிரமமுமின்றி பதிவு செய்ய வேண்டும் எனவும், அம்மனுக்கள் மீது குறுகிய காலத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளதாகக் கூறினார். இம்முகாமில் கலந்து கொண்ட பொதுமக்கள் தங்களது குறைகளுக்குத் தீர்வு காணப்பட்டதற்கு சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு தங்களது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர்.
மேலும் திருச்சி மாநகரம் மற்றும் திருச்சி சரக பகுதிகளில் உள்ள மாணவ-மாணவியருக்கு போதைப் பொருட்களின் தீமைகள் குறித்தும், போதைப் பொருட்கள் ஒழிப்பு குறித்தும் அமைக்கப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு குழுக்கள் கலந்தாய்வு கூட்டம், காவல்துறை கூடுதல் இயக்குநர் சட்டம் & ஒழுங்கு சங்கர், இ.கா.ப., தலைமையில் திருச்சி உறையூர் பிஷப் ஹீபர் கல்லூரி அரங்கத்தில் நேற்று (07.06.2023) மதியம் 3 மணிக்கு நடைபெற்றது. இக்கலந்தாய்வு கூட்டத்தில் திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன் இ.கா.ப., திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா இ.கா.ப., காவல் துணை ஆணையர், திருச்சி சரகத்தை சேர்ந்த காவல்துறை துணை தலைவர், மாநகர ஆணையர்கள் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.