திருக்கார்த்திகையை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற விண்ணை முட்டும் முழக்கத்துடன் மகா தீபம் ஏற்றப்பட்டது. திருவண்ணாமலையின் 2,668 அடி உயர மலை உச்சியில் பிரம்மாண்ட கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. 130 கிலோ எடையுள்ள தீப கொப்பரையில் 3,500 லிட்டர் நெய், ஆயிரம் மீட்டர் திரி பயன்படுத்தி தீபம் ஏற்றப்பட்டது.
எவ்வளவு மழை பெய்தாலும் தொடர்ந்து 11 நாட்கள் காட்சி தரும் வகையில் மகா தீபம் ஏற்றப்பட்டுள்ளது. திருவண்ணாமலை தீபத்திருவிழாவையொட்டி, உள்ளூரில் 5,000 பக்தர்களுக்கும், வெளியூர் பக்தர்கள் 15,000 பேருக்கும் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் தங்கள் இல்லங்களில் உள்ள வாசலில் அகல் விளக்கேற்றினர். அதேபோல், பழனி முருகன் கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோவில், திருச்செந்தூர் முருகன் கோவில், ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோவில், தஞ்சை பெரிய கோவில் உள்ளிட்ட தமிழ்நாட்டில் மிகப் பிரசித்திப் பெற்ற திருத்தலங்களில் தீபம் ஏற்றப்பட்டது. பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.