திருவண்ணாமலை யோகிராம் சுரத்குமார் ஆசிரமத்தில் தெலுங்கானா மாநில ஆளுநரும் பாண்டிச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், யோகிராம் சுரத்குமார் ஆசிரமத்திற்கு வருகை தந்து யோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்தில் தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து விஜயா ராமநாதன் பாடிய யோகிராம் சுரத்குமார் பக்தி பாடல்கள் ஒலித்தட்டு மற்றும் யோகிராம் சரத்குமார் துதி ஆரம் புத்தகத்தையும் வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘பாண்டிச்சேரி வளர்ச்சிக்காக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியும் நானும் அண்ணன் தங்கையாக பணியாற்றுகிறோம். எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. பாண்டிச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் மாற்றம் குறித்து முதல்வரிடம்தான் கேட்க வேண்டும்.’ பாராளுமன்றத் தேர்தலில் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு, ‘அருணாச்சலேஸ்வரர் தான் முடிவு எடுக்க வேண்டும்.’ என்றார்.
தெலுங்கானாவில் தமிழ் வழிக் கல்வி பள்ளிகள் மூடப்படுவது குறித்த கேள்விக்கு, “அது தவறானது அவ்வாறு நடைபெற்றால் நான்தான் முதலில் எதிர்ப்பு தெரிவிப்பேன், தமிழுக்காக தமிழிசை என்றென்றும் பாடுபடுவேன் குரல் கொடுப்பேன். சனாதனத்தை பற்றி பேசுபவர்களின் குடும்பத்தில் சிலர் ஆன்மீகத்தை கடைப்பிடிக்கிறார்கள், ஒரு பேஷனுக்காக கூறுகிறார்கள். ஆன்மீகத்தை பற்றியும் அதன் அதிசயத்தை பற்றியும் முழுவதுமாக உணர்ந்து இருந்தார்கள் என்றால் அவர்கள் பேசமாட்டார்கள். தன்னைப் பொறுத்தவரையில் நாக்கினால் மட்டும்தான் பேசுகிறார்கள். அவர்களுடைய உள்ளத்தில் ஆன்மீகம் இருக்கிறது.
ஒரு மருத்துவர் தனக்கு உயிர் தெரியவில்லை அதற்காக உயிரே இல்லை என்று சொல்ல முடியுமா. அதேபோல் சனாதனத்தை பற்றி பேசுபவர்களுக்கு இறைவன் தெரியவில்லை என்றால் இறைவனே இல்லை என்று சொல்ல முடியாது” என்றார்.