இந்தியா முழுவதும் மக்கள் நாளையும், நாளை மறுநாளும் தீபாவளி பண்டிகைக் கொண்டாட இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் நாளை (12ம் தேதி) தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். இந்நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தமிழில் பேசி தீபாவளி வாழ்த்தைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தமிழ்நாடு ராஜ் பவன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், “வணக்கம், ஒளியின் திருநாளான தீபாவளி திருநாளில் என் அன்பிற்குரிய தமிழக சகோதர சகோதரிகளுக்கு எனது அன்பான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாரதம் முழுவதும் கொண்டாடப்படும் இந்த விழா அதர்மத்தின் மீது தர்மத்தின் வெற்றியையும், இருளின் மீது ஒளியின் வெற்றியையும் குறிக்கிறது.
யாதும் ஊரே யாவரும் கேளீர் அல்லது வசுதேய்வ குடும்பகம் என்ற நமது சனாதன தத்துவத்தின் இலட்சியங்கள் முழுமையாக வெளிப்படுகிற, உலகெங்கிலும் உள்ள பாரதவாசிகள் மதம் அல்லது மொழி வேறுபாடின்றி ஒரே குடும்பமாக தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள்.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆடைகள், பட்டாசுகள் மற்றும் பரிசுப் பொருட்களை வாங்க உறுதி மொழி எடுப்போம். சமீபத்தில் விருதுநகரில் உள்ள சிவகாசி மற்றும் சாத்தூரில் உள்ள பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழில்களில் வேலை செய்யும் தொழிற்சாலைகளுக்கு சென்று நமது தீபாவளியை ஒளி செய்யும் பெண் தொழிலாளிகளின் உழைப்பை நேரில் பார்த்தேன்.
உள்நாட்டில் தயாரிக்கும் பட்டாசுகளை வாங்கி அவர்களுக்கு உதவி நன்றியை தெரிவித்துக் கொள்வோம். அவர்களின் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்வோம். மீண்டும் உங்களுக்கு மகிழ்ச்சியான பாதுகாப்பான தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் கடந்த செப்டம்பர் மாதம் 23ம் தேதி நடைபெற்ற எண்ணித் துணிக நிகழ்ச்சியில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழ் ஆளுமைகளுடன் கலந்துரையாடினார். அந்த நிகழ்ச்சியில் அவர், “நான் தமிழ் மொழியை முழுமையாகக் கற்று, அதனை நாட்டின் பிற பகுதிகளுக்கு கொண்டு செல்வதை வாழ்நாள் லட்சியமாக மாற்றிக்கொண்டுள்ளேன்” என்று பேசினார்.
தமிழ்நாடு ஆளுநர் இரு மாதங்களில் தமிழைக் கற்று தமிழில் தீபாவளி வாழ்த்தைத் தெரிவித்துள்ளார் என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.