
விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் அருந்தி 22 உயிரிழந்த விவகாரம் தமிழ்நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் கள்ளச்சாராயத்திற்கான மூலப் பொருட்களை விற்றவர் உள்ளிட்ட மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராயத்தை கண்டறிந்து அதனை அழிக்கும் பணியிலும் கள்ளச்சாராயத்தை விற்பவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளிலும் காவல்துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இன்று காலை செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் டி.எஸ்.பி. மணிமேகலை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கள்ளச்சாராயம் அருந்தி ஏற்பட்ட உயிரிழப்புகள் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைகள் குறித்து ஆளுநர் அரசிடம் அறிக்கை கேட்டுள்ளார். எதிர்கட்சியான அதிமுக வரும் 22ம் தேதி ஆளுநரைச் சந்தித்து புகார் மனு கொடுக்க இருக்கிறது.
இந்நிலையில், கடந்த 19ம் தேதி தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, 21ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவியை பாஜகவினர் சந்தித்து கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பாக புகார் மனு, அமைச்சர் செந்தில்பாலாஜியை பதவியிலிருந்து நீக்கவேண்டும், தமிழ்நாடு சட்ட ஒழுங்கு குறித்த விவரங்கள் தொடர்பாக மனு அளிக்க உள்ளோம் என்று தெரிவித்திருந்தார்.
அதன்படி இன்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் மற்றும் பாஜக மகளிரணி நிர்வாகிகள் ஆநரை சந்தித்து புகார் மனு அளித்தனர்.
அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “ஆளுநர் ரவியிடம் கள்ளச்சாராய விவகாரம், அமைச்சர் செந்தில் பாலாஜி தகுதிநீக்கம் குறித்து கோரிக்கை வைத்துள்ளோம். இதில் பதவி பிரமாணத்திற்கு எதிராக செயல்பட்ட செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறோம். அமைச்சர் ஒருவர் அரசியல் அமைப்பு சட்டத்தை மீறினால் ஆளுநர் நடவடிக்கை எடுக்கலாம். அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான விசாரணை நேர்மையாக நடக்க வாய்ப்பில்லை. அதேபோல், அமைச்சர் செஞ்சி மஸ்தான் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறோம். தமிழகத்தில் நடவடிக்கைகள் எடுக்க முடியாத வகையில் காவல்துறையினரின் கைகள் கட்டப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.