பேரறிவாளன் விடுதலைத் தொடர்பாக, தமிழ்நாடு அரசு முடிவெடுக்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு எழுத்துப் பூர்வ வாதத்தை தாக்கல் செய்துள்ளது.
தம்மை விடுவிக்கக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவுற்ற நிலையில் நாள் குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, எழுத்துப் பூர்வ வாதங்களை ஒப்படைக்க அனைத்து தரப்பினருக்கும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், பேரறிவாளன் விடுதலை தொடர்பாக, குற்றத்தின் தீவிர தன்மை, ஆதாரங்கள் உள்ளிட்ட எவற்றையும் கருத்தில் கொள்ளாமல் தமிழக அமைச்சரவை முடிவெடுத்து, ஆளுநருக்கு அனுப்பி இருப்பதாக மத்திய அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.
எனவே, இது குறித்து முடிவெடுக்க குடியரசுத்தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், பேரறிவாளனை விடுவிப்பது தொடர்பாக, முடிவெடுக்கும் அதிகாரம் குடியரசுத்தலைவருக்கு மட்டுமே உள்ளது என மத்திய அரசு தனது வாதத்தில் குறிப்பிட்டுள்ளது.