திருவாரூருக்கு வந்திருந்த மனித நேய ஜனநாயக கட்சி மாநில பொதுச்செயலாளர் தமிமுன்அன்சாரி செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்,
"பெட்ரோல் டீசல் விலை கடுமையாக வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள்,தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் கடுமையாக பாதித்துள்ளனர். பல வகையிலும் நெருக்கடி நிலவி வருகிறது. இந்த விலையை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி விடுத்துள்ள பந்தில் மனித நேய ஜனநாயக கட்சியும் கலந்துகொண்டு ஆதரவளிக்கும்.
குட்கா ஊழல் விவகாரம் தமிழகத்தில் பரபரப்பான சூழலை உருவாக்கியுள்ளது. இந்த நிலையில் தமிழக மக்கள் எந்த மாதிரியான நடவடிக்கைகளை அரசு எடுக்க போகிறது என எதிர்நோக்கி உள்ளனர். காவல்துறையினர் ஒருவர் மாறி ஒருவர் குறை கூறி வருவது ஆரோக்கியமான ஒன்றல்ல தமிழக முதல்வர் தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டும்.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை முடிவு செய்து ஆளுநருக்கு பரிந்துரை செய்ய வேண்டும். ஆளுநர் மற்றும் மத்திய அரசு அவர்களின் விடுதலைக்கு எந்த எதிர்ப்பும் தடையும் தெரிவிக்க கூடாது.
தமிழக அரசு பாஜகவிற்கு தொடர்ந்து கூஜா தூக்கினால் அதிமுகவை முற்றிலும் பாஜக அழிந்துவிடும் என புரிந்து கொள்ள வேண்டும்." என்றார்.