
உளுந்தூர்பேட்டை அருகே சென்றுகொண்டிருந்த அரசு குளிர்சாதன பேருந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
மதுரை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 37 பயணிகளுடன் நேற்று (05/12/2021) நள்ளிரவு அரசு குளிர்சாதன பேருந்து சென்னை நோக்கிச் சென்றுக்கொண்டிருந்தது. அந்தப் பேருந்தை மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஜோதீஸ்வரன் ஓட்டிவந்த நிலையில், உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலை அருகே இந்தப் பேருந்தானது வந்துகொண்டிருந்தபொது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இப்பேருந்தில் பயணம் செய்த ஒரு குழந்தை, மூன்று இளைஞர்கள் உட்பட 10 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உளுந்தூர்பேட்டை காவல்துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்துவருகின்றனர்.
இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவுசெய்துள்ள காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இதனிடையே, பேருந்தானது நெடுஞ்சாலைத்துறை ஊழியர்களின் உதவியுடன் மீட்கப்பட்டது.