தமிழகத்தின் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு மற்றும் வழிகாட்டும் திட்டமான ‘நான் முதல்வன்’ திட்டத்தை கடந்த மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும், இது தன்னுடைய கனவுத் திட்டம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.
இந்நிலையில் இத்திட்டத்தின் ஒரு பகுதியாக போட்டித் தேர்வுப் பிரிவு என்னும் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இப்பிரிவில் தமிழ்நாட்டு மாணவ மாணவிகள் போட்டித் தேர்வை எளிதாக அணுகும் வண்ணம் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளது. நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட போட்டித் தேர்வுப் பிரிவினை அமைச்சர் உதயநிதி நாளை தொடங்கி வைக்கிறார். இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “முதலமைச்சரால் தொடங்கப்பட்ட மாபெரும் திறன் மேம்பாட்டிற்கான "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ள போட்டித் தேர்வுப் பிரிவினை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் (07.03.2023) அன்று காலை 10.00 மணியளவில் தொடங்கி வைக்கவுள்ளார்.
"நான் முதல்வன்" திட்டத்தின் போட்டித் தேர்வுகள் பிரிவின் கீழ், அரசுத் தேர்வுகளான SSC, Railway, Banking, UPSC, TNPSC, Defence, போன்ற பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தமிழ்நாடு முழுவதும் சிறந்த முறையில் பயிற்றுவிக்கும் வகையில் இத்திட்டம் மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே தொடங்கப்படவுள்ளது. இப்போட்டித் தேர்வு பிரிவில் மாணவர்களுக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் பயிற்சி வகுப்புகள் இலவசமாக வழங்கப்படும். இதன் மூலம் தமிழ்நாட்டு இளைஞர்கள் போட்டித் தேர்வுகளை எளிதாக அணுகும் வண்ணம் போட்டித் தேர்வு பிரிவு தொடங்கப்படவுள்ளது. இந்த தொடக்க விழாவில் உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன் போன்றோர் கலந்துகொள்ள உள்ளனர்” என அரசுக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.