தமிழ்நாட்டில் குருமன்ஸ் சாதி மக்கள் பழங்குடியின பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் போன்ற மாவட்டங்களில் பரவலாக வசிக்கிறார்கள். தமிழ்நாட்டில் சில லட்சம் மக்கள் உள்ளதாக கூறுகின்றனர்.
1954 ஆம் ஆண்டு முதல் குருமன்ஸ் மக்களுக்கு எஸ்.டி சான்றிதழ் தமிழ்நாட்டில் வழங்கப்பட்டு வருகிறது. குருமன்ஸ் சாதியை தவிர்த்து வேறுசில சாதியினர் குருமன்ஸ் சாதியினர் எனச்சொல்லி போலியாக சாதி சான்றிதழ் பெருகிறார்கள் என வருவாய்த்துறைக்கு வந்த பல புகார்களின் அடிப்படையில் எஸ்.டி சான்றிதழ் வழங்குவது கடுமையாக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு, தானிப்பாடி, போந்தை, சாத்தனூர், வானாபுரம் போன்ற பகுதிகளை சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களில் ஆயிரக்கணக்கான மக்கள், ‘நாங்கள் குருமன்ஸ் சாதியினர். முன்பு எங்களை குரும்ப கவுண்டர் என அழைப்பார்கள். ஆவணங்களில் அதுவே பதிவாகிவிட்டது. இதனால் எங்களை நீங்கள் குருமன்ஸ் இல்லை குரும்பகவுண்டர் சாதி எனச்சொல்லி வருவாய்த்துறை அதிகாரிகள் சான்றிதழ் தரமறுக்கிறார்கள்.
நாங்கள் குருமன்ஸ் என்பதற்கான தொல்லியல் ஆதாரம் உள்ளது. இதற்காக அரசாங்கம் அமைத்த ஆய்வுக்கமிட்டி எங்கள் கிராமங்களில் ஆய்வு செய்து அதன் அறிக்கையை அரசாங்கத்துக்கு வழங்கியுள்ளது. நீதிமன்றம் ஆய்வு செய்து குருமன்ஸ் மக்களுக்கு எஸ்.டி சான்றிதழ் தரச்சொன்னது. ஆனால் வருவாய்த்துறையினர் தரமறுக்கிறார்கள். தாத்தா, அப்பாக்களுக்கு குருமன்ஸ் என சாதி சான்றிதழ் உள்ளது. அவர்களின் பிள்ளைகளுக்கு எஸ்.டி சான்றிதழ் தரமறுக்கிறார்கள். எம்.பி.சி என சான்றிதழ் தருகிறோம் என்கிறார்கள். சாதி சான்றிதழ் கிடைக்காமல் பிள்ளைகளால் மேல்படிப்பு படிக்கவோ, அரசு உதவித்தொகை, விடுதி ஒதுக்கீடு போன்றவற்றையோ பெறமுடியவில்லை’ என்றார்கள்.
ஜீலை 4 ஆம் தேதி காலை குருமன்ஸ் சாதி சான்றிதழ் கேட்டு திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்குள் காத்திருப்பு போராட்டத்தை பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தொடங்கினர். இதனை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் அன்றைய இரவு நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள் அலுவலகத்திலேயே தங்கி, உணவு, தண்ணீர் வாங்கி வரச்சொல்லி சாப்பிட்டுவிட்டு, கொசுக்கடியில் அங்கேயே உறங்கி போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
இரண்டாவது நாளாக 5ஆம் தேதியும் போராட்டம் தொடர்ந்தது. பள்ளி பிள்ளைகள் 50க்கும் அதிகமானோர் இதில் கலந்துகொண்டனர். மதியம் 3 மணியளவில் வேலூர் சரக டி.ஐ.ஐீ ஆனிவிஜயா, எஸ்.பி பாலகிருஷ்ணன், இராணிப்பேட்டை எஸ்.பி தீபாசத்தியன் தலைமையில் 300க்கும் அதிகமான போலீஸார், அதிரப்படையினர், கமாண்டோ படையினர் களமிறக்கப்பட்டனர். போராட்டம் செய்த மக்களை இவர்கள் சுற்றி வளைத்தனர். காவல்துறை அதிகாரிகள் போராட்டம் செய்த மக்களுடன் சமாதானம் பேசினார்கள், மக்கள் சமாதானத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.
வருவாய்த்துறை – போராட்டக்காரர்கள் – காவல்துறை என முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஜீலை 8, 9 தேதிகளில் முதலமைச்சர் அரசு முறை பயணமாக ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க திருவண்ணாமலைக்கு வருகிறார். இந்த நேரத்தில் போராட்டம் செய்வது சரியில்லை, பாதுகாப்பு பிரச்சனை ஏற்படும். அதனால் உங்க கோரிக்கை குறித்து மனு தாருங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என அதிகாரிகள் சொன்னதை போராட்டக்குழு ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
உடனே போராட்டத்தில் ஈடுப்பட்ட பொதுமக்களை சுற்றி வளைத்த காவல்துறையினர், 60 வயதுக்குட்பட்ட 200க்கும் அதிகமான ஆண்களை கைது செய்தனர். வயதானவர்களை வீட்டுக்கு அனுப்பினர். போராட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள், பள்ளி மாணவ – மாணவிகள், சிறு பிள்ளைகள் கைது செய்வதில் பாகுபாடு காட்டவேண்டாம் எங்களையும் கைது செய்யுங்கள், எங்களுக்காகத்தான் அவர்கள் போராடுகிறார்கள், நாங்களும் போராடினோம் என மறியல் செய்தனர். அவர்களை மிரட்டியும், சமாதானம் செய்தும் போலீஸ் வேனில் ஏற்றினர்.
கடந்த 5 ஆண்டுகளாக பலமுறை இம்மக்கள் சாதி சான்றிதழ் கேட்டு பலவிதமான போராட்டத்தில் ஈடுபட்டனர். வாரக்கணக்கில் கோட்டாட்சியர் அலுவலகத்துக்குள் அமர்ந்து போராட்டம் செய்தனர். இப்போதும் போராட்டம் செய்கின்றனர். ஆனால் இன்னும் அவர்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை.
படங்கள்: எம்.ஆர்.விவேகானந்தன்