கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் சந்தப்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் சண்முகம். இவரது மகன் சுந்தர்(36). திருமணமான இவருக்கு மனைவி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் திருக்கோவிலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் துணை வட்டாட்சியராக பணி செய்து வந்துள்ளார். விடுமுறை நாளான நேற்று முன்தினம் அவரது நண்பர்களுடன் கல்வராயன் மலையைச் சுற்றிப் பார்க்கச் சென்றுள்ளார். பின்னர் வெள்ளிமலை அருகில் உள்ள ஒரு விடுதியில் இரவு தங்கியிருந்தனர்.
நேற்று காலை உணவு சாப்பிட்டுவிட்டு சுந்தர், அவரது நண்பர்கள் மூவருடன் மலையில் உள்ள கவ்வியம் நீர்வீழ்ச்சிக்கு சென்றுள்ளார். அங்கு சுந்தரும் அவரது நண்பர்களும் குளித்துள்ளனர். பிறகு நால்வரில் மூவர் மட்டும் கரையேறியுள்ளனர். சுந்தரை மட்டும் காணவில்லை. திடீரென்று தண்ணீரில் குளித்துக்கொண்டிருந்த சுந்தர் மாயமானது கண்டு அவரது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்து அவரை தண்ணீரில் தேடியுள்ளனர். சுந்தர் கிடைக்கவில்லை.
இந்நிலையில் அங்கிருந்தவர்கள், பேரிடர் பாதுகாப்புப் படையினரிடம் தகவல் அளித்துள்ளனர். அவர்களுடன் சேர்ந்து நீண்ட நேரம் தேடிய பிறகு சுந்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கரியாலூர் போலீஸார், அவரது உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.