கர்ப்பிணிகள் முதல் நோயாளிகள் வரை அரசு மருத்துவமனை என்று சொன்னதும் அலட்சியம் காட்டுவார்கள். இவர்கள் மத்தியில் செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் என்றதும் கர்ப்பிணிகளுக்கும், நோயாளிகளுக்கும் முகம் மலர்கிறது.
இதற்கு காரணம், அந்த ஆஸ்பத்திரியில அப்படி ஒரு கவனிப்பு இருக்கு. யாரையும் நோயாளியாக பார்க்கமாட்டாங்க. எல்லாரையும் சரிசமமா தான் பார்ப்பாங்க. பணத்தை பிடிங்குகிட்டு சிரிச்சுகிட்டே பார்க்கும் தனியார் மருத்துவமனைகளை விட மேலானது செருவாவிடுதி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் என்கிறார்கள்.
மற்ற அரசு மருத்துவமனை போல இருக்காதுங்க, உள்ளே நடைபாதை, பாதை எங்கும் பச்சை பசேல்னு செடி,கொடிகள், ஆங்காங்கே மூலிகை தோட்டம். வளாகத்திலேயே கர்ப்பிணிகளுக்கான இயற்கை காய்கறி, பழத் தோட்டம், பால்மாடு. நோயாளிகளை சோர்வடையவிடாமல் தடுக்கும் புத்துணர்ச்சி ஓவியங்கள் தீட்டிய சுவர்கள். இத்தனையும் தாண்டி மருத்துவர்கள் உள்பட அத்தனை ஊழியர் முகத்திலும் சிரிப்பு. சிடுசிடுப்பு இருக்காது. சுகாதார நிலையத்தில் என்ன மருந்துகள் இருப்பு உள்ளது என்ற அறிவிப்பு பலகை, ஆய்வுக்கூடம், அறுவை அரங்கு, ஸ்கேன் வசதி, சில மாதங்களுக்கு ஒரு முறை வளைகாப்பு திருவிழா. ஒவ்வொரு வாரமும் சத்துணவு, திரும்பிய பக்கம் எங்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், இப்படி இன்னும் சொல்லிக்கிட்டே போகலாம் என்கிறார்கள் அந்த அரசு சுகாதார நிலையத்தை நன்கு அறிந்தவர்கள்.
மேலும் இந்த மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் தான் முதன் முதலில் கர்ப்பிணிகளுக்கு சத்துணவும், வளைகாப்பும் நடத்தினாங்க. அப்புறம் தான் தமிழ்நாடு அரசே மாநிலம் முழுவதும் செய்ய திட்டமிட்டாங்கனா பாருங்க என்றனர்.
இந்த நிலையில் தான் தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டம் செருவாவிடுதி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான வாராந்திர மருத்துவ பரிசோதனை, மற்றும் ஆலோசனை முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போது அங்கு சென்றோம்.
மக்கள் சொன்ன அத்தனை திட்டங்களையும் செயல்படுத்திக் கொண்டிருக்கும் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வி.சௌந்தர்ராஜன் முகாமிற்கு தலைமை வகித்தார். மருத்துவ அலுவலர்கள் டாக்டர்கள் ரஞ்சித், ரிஸ்வானா பேகம், அம்சவாணி, கலைச்செல்வி ஆகியோர் கர்ப்பிணி பெண்களை பரிசோதனை செய்து, மருந்து, மாத்திரைகள், ஆலோசனைகள் வழங்கினர். தொடர்ந்து முகாமில், கலந்து கொண்ட கர்ப்பிணி பெண்களுக்கு சுகாதார நிலைய வளாகத்தில் உள்ள காய்கனித் தோட்டத்தில், இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்காமல் இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி, இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட தர்பூசணி பழங்கள் வழங்கப்பட்டது.
இதுகுறித்து வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வி.சௌந்தரராஜன் கூறும் போது, "தற்போது கோடைகாலமாக இருப்பதால், உடலில் நீர்சத்து குறைவு ஏற்படும். இதனால் கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. அதனால் இந்த ஆண்டு முதல் இயற்கை தோட்டத்தில் தர்பூசணி பழங்கள் விளைவிக்கப்பட்டது. சிறப்பான முறையில் ஏராளமான பழங்கள் விளைந்துள்ளது. இவற்றை கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கியுள்ளோம்" மேலும் இங்கு விளைவிக்கப்படும் காய்கனிகளை இங்கு சாப்பிடக் கொடுப்பதுடன் அவர்கள் வீட்டிற்கும் எடுத்து சென்று சாப்பிடவும் கொடுத்து அனுப்புகிறோம். கர்ப்பிணிகள் தற்போது உடல் ஆராக்கியமாக இருந்தால் தான் பிரசவத்தில் சிக்கல் இருக்காது. சுயபிரசவம் நடக்கும். இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடர்ந்து சிகிச்சையும், ஆலோசனையும் பெற்று வரும் 90 சதவீதம் கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் தான் நடக்கிறது. அதனால் தான் இயற்கை உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து சாப்பிடச் சொல்கிறோம். பலருக்கு இயற்கையான காய், கனிகள் கிடைப்பதில்லை அதனால் ரசாயன உரங்கள் பயன்படுத்திய உணவுகளை சாப்பிடுகிறார்கள். அதனால தான் சுகாதார வளாகத்திலேயே காய், கனிகளை விளைய செய்து கர்ப்பிணிகளுக்கு வழங்கி வருகிறோம். சுத்தமான நாட்டு மாட்டு பால், நாட்டுக்கோழி முட்டை, வெல்லம் ஆகியவை கொடுக்கிறோம் என்றார். முகாமில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சந்திரசேகரன், கண் மருத்துவ நுட்பநர் திரவியம், மருந்தாளுநர் சரவணன், செவிலியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். காய்கனிகளோடு கர்ப்பிணி பெண்களுக்கு தர்பூசணி பழம் வழங்கும் திட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.