நாகை மாவட்டம் நம்பியார் நகர் மீனவ கிராமத்தில் தன்னிறைவு திட்டத்தின் கீழ் 34 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மீன்பிடி துறைமுகம் கட்டப்பட்டு வருகிறது. கடலை வளைத்து துறைமுகம் அமைக்கப்பட்டுவருவதால், மறுபுரத்தில் கடல் அரிப்பும் ஏற்பட்டு நம்பியார் நகர் மீனவ கிராமத்தில், கடற்கரை ஓரம் இருந்த வீடுகள், மின் கம்பங்கள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் வைக்கும் பத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அனைத்தும் கடலில் இழுத்துச் செல்லப்பட்டன. இதைக் கேள்விப்பட்டு நேற்று (19.09.2021) நம்பியார் நகர் மீனவ கிராமத்திற்கு வந்த முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன், கடல் அரிப்பு ஏற்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டார்.
அப்போது அவரிடம் பேசிய மீனவர்கள், “நாளுக்கு நாள் கடல் அரிப்பு அதிகரித்துவருவதால், அச்சம் அதிகரித்துவிட்டது. இங்குள்ள மற்ற குடியிருப்புகள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்படுவதை அரசு வேடிக்கை பார்க்கிறது” என குற்றம்சாட்டினர். இதையடுத்து பேசிய முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன், “கடற்கொள்ளையர்களால் மீனவர்கள் தாக்கப்படும் விவகாரம் குறித்து அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் விரிவான கடிதம் வழங்க இருக்கிறேன். நம்பியார் நகர் மீனவ கிராமம் கடலில் மூழ்கும் முன், கடற்கரையோரம் கருங்கல் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்.
இலங்கை கடற்கொள்ளையர்களால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த தமிழக சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர நாங்கள் தொடர்ந்து முயற்சித்தும் அதற்கு பேரவைத் தலைவரும், மீன்வளத்துறை அமைச்சரும், அவை முன்னவரும் வாய்ப்பு அளிக்கவில்லை. மீனவர்கள் தாக்கப்படும் விவகாரம் குறித்து அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் விரிவான கடிதம் வழங்க இருக்கிறேன்’ என கூறினார்.