திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதியில் தொடர்ந்து ஆறாவது முறையாக வெற்றிபெற்றதன் மூலம் உணவு மற்றும் வழங்கல்துறை அமைச்சர் பதவியைப் பெற்றார் சக்கரபாணி.
அமைச்சர் சக்கரபாணி தொடர்ந்து தனது தொகுதி மக்களின் குறைகளையும் கோரிக்கைகளையும் தொடர்ந்து நிறைவேற்றிக் கொடுத்துவந்ததுடன் மட்டுமல்லாமல் தொகுதி மக்களின் வீடுகளில் நடக்கும் நல்லது கெட்டதில் கலந்து கொண்டு மக்கள் மனதிலும் நல்ல பெயர் எடுத்து வந்தார். இந்த நிலையில்தான் கடந்த தேர்தலின்போது தொகுதி மக்கள் தங்கள் பகுதியில் அரசு கலைக்கல்லூரி வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். இதை முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு அமைச்சர் கொண்டுபோனதின் பேரில் கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரின்போது ஒட்டன்சத்திரத்தில் பழனியாண்டவர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும். அதேபோல் தொப்பம்பட்டி ஒன்றியத்தில் அரசு கலைக்கல்லூரி அமைக்கப்படும் என்று ஒட்டன்சத்திரம் தொகுதியில் மட்டும் இரண்டு கல்லூரிகள் அமைக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட அப்பகுதி மக்கள் பூரித்துப்போய் விட்டனர்.
அதோடு கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒட்டன்சத்திரத்திலிருந்து தேவத்தூருக்கும், அதுபோல் பழனியிலிருந்து கள்ளிமந்தையம், தேவத்தூர் வழியாக ஈரோடு உள்பட சில பகுதிகளுக்கு புதிய பேருந்துகளையும் துவக்கி வைத்தார். ஒரு கல்லூரிக்கு இரண்டு கல்லூரிகளைக் கொண்டு வந்த அமைச்சர் சக்கரபாணியைத் தொகுதி மக்கள் எங்குப் பார்த்தாலும் பாராட்டி வருகிறார்கள். அதைத்தொடர்ந்து அமைச்சர் சக்கரபாணியும் முதன் முதலில் தாராபுரம் ரோட்டில் உள்ள சின்னையாகவுண்டன் வலசில் கல்லூரி அமைக்க அனைத்து வேலைகளையும் துரிதப்படுத்தி கல்லூரி தொடங்குவதற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் பழனியாண்டவர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை நாளை திறந்து வைக்கிறார். இந்த விழாவுக்கு அமைச்சர் சக்கரபாணி தலைமை தாங்குகிறார். சிறப்பு விருந்தினராகக் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். அதோடு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி உள்பட அதிகாரிகளும், கட்சிக்காரர்களும், தொகுதி மக்களும் பெருந்திரளாகக் கலந்து கொள்ள இருக்கிறார்கள். வெற்றிபெற்ற 6 மாதத்திலேயே தொகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றி அரசு கல்லூரியை அமைச்சர் கொண்டு வந்திருக்கிறார்.