திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து நேற்றிரவு கல்லணைக்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. திருச்சி-சென்னை பைபாஸ்-ஐ கடந்து கல்லணை சாலைக்குச் சென்றபோது பேருந்தின் ஹெட் லைட் பழுதானது. இருளுக்குள் சிறிது தூரம் சென்ற போதிலும் கும்மிருட்டு காரணமாக பேருந்து ஓட்டுநரால் தொடர்ந்து பேருந்தை ஓட்ட முடியவில்லை. மேலும், பேருந்திலும் நிறையப் பயணிகள் இருந்தனர். அவர்களின் பாதுகாப்பு கருதி பேருந்தை நிறுத்திய ஓட்டுநர், நடத்துநருடன் என்ன செய்யலாம் என்று ஆலோசனை நடத்தினார்.
பின்னர் நடந்ததை பற்றிக் கவலைப்படாமல், நடப்பது குறித்துத் திட்டமிடுவோம் என்று முடிவுக்கு வந்த இருவரும், அந்த சாலையில் கல்லணையை நோக்கிச் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனங்களைக் கையை காட்டி நிறுத்தினர். அதன் பின்னர் பேருந்தில் ஹெட்லைட் எரியாதது குறித்து எடுத்துக்கூறி, பேருந்தின் முன்னால் இருசக்கர வாகனத்தைக் குறைந்த வேகத்தில் ஓட்டி சென்றால் அந்த வெளிச்சத்திலேயே பேருந்தை ஓட்டி வந்து விடுவேன் என்று ஓட்டுநர் கூற, அதற்கு இருசக்கர வாகன ஓட்டிகள் சம்மதித்தனர். அதன் பின்னர் இருசக்கர வாகன ஹெட் லைட் வெளிச்சத்தில் பேருந்தைக் கல்லணைக்கு ஓட்டுநர் ஓட்டி சென்றுள்ளார். பேருந்து ஓட்டுநரின் இந்த சாதுரியத்தை பயணம் செய்த பயணிகள் வெகுவாக பாராட்டினர்.