Skip to main content

கொலை, பாலியல், ஆள் கடத்தல் 5 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்!

Published on 28/06/2023 | Edited on 28/06/2023

 

Goondass on five people in salem

 

சேலத்தில், கொலை, ஆள் கடத்தல், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட 5 நபர்களை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். 

 

சேலம் பள்ளப்பட்டியைச் சேர்ந்தவர் உதயசங்கர். இவருக்கும் சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள காமலாபுரம் நடுத்தெருவைச் சேர்ந்த அன்பழகன் மகன் பன்னீர்செல்வம் (24) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் அவரைக் கொலை செய்யத் திட்டமிட்ட பன்னீர்செல்வம், கடந்த மே மாதம் 15 ஆம் தேதி, தனது கூட்டாளிகளான சேலம் மூன்று சாலை ஜெயா நகரைச் சேர்ந்த ஆனந்த் (26), சேலம் கல்லாங்குத்து கோவிந்தன் தெருவைச் சேர்ந்த கணேஷ் முத்துராஜ் மகன் விக்கி என்கிற விக்னேஷ்குமார் (23), பள்ளப்பட்டி சின்னேரி வயல்காட்டைச் சேர்ந்த சந்தோஷ்குமார் (28) ஆகியோரை துணைக்கு அழைத்துக் கொண்டார். 

 

அப்போது அவர்கள் உதயசங்கரை அலைப்பேசியில் தொடர்பு கொண்டு பள்ளப்பட்டி அருகே உள்ள ஹட்சன் பால் சொசைட்டி அருகில் சமாதானம் பேச வருமாறு அழைத்தனர். அங்கு வந்த உதயசங்கரை அவர்கள் சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து விசாரித்த பள்ளப்பட்டி காவல் நிலைய காவல்துறையினர் கொலையாளிகள் நால்வரையும் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் அடைத்தனர். 

 

இவர்களில் பன்னீர்செல்வத்தின் மீது ஏற்கனவே கடந்த 2021 ஆம் ஆண்டு கைதி வழிக்காவலுக்குச் சென்றபோது காவல்துறை வாகனத்தை மறித்ததாகவும், 2022 ஆம் ஆண்டு ஆள்கடத்தலில் ஈடுபட்டதாகவும் ஓமலூர், ஆத்தூர் காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதற்கிடையே, சேலத்தை அடுத்த சிவதாபுரம் அங்காளம்மன் கோயில் அருகில் வசிக்கும் மாதேஸ்வரன் மகன் மணிகண்டன் (25) என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.  

 

பன்னீர்செல்வம், ஆனந்த், விக்கி என்கிற விக்னேஷ்குமார், சந்தோஷ்குமார், மணிகண்டன் ஆகியோர் தொடர்ந்து கொடுங் குற்றங்களில் ஈடுபட்டு வந்ததோடு, அவர்கள் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களிலும் ஈடுபட்டு வந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் ஐந்து பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர காவல்துறை துணை ஆணையர்கள் லாவண்யா, கவுதம் கோயல் ஆகியோர் காவல்துறை ஆணையருக்கு பரிந்துரை செய்தனர். 

 

அதை ஏற்றுக்கொண்ட ஆணையர் விஜயகுமாரி, அவர்கள் ஐவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் அவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்களிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான ஆணை வழங்கப்பட்டது. ஒரே நாளில் 5 நபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்த சம்பவம், சேலத்தில் ரவுடிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்