Skip to main content

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு: யுவராஜ் தரப்பு வக்கீலின் கேள்விகளால் நிலைகுலைந்த முக்கிய சாட்சி!

Published on 07/09/2018 | Edited on 07/09/2018


கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் இன்று (செப்டம்பர் 6, 2018) நடந்த குறுக்கு விசாரணையின்போது அரசுத்தரப்பு முக்கிய சாட்சியான கலைசெல்வன், குற்றம் சாட்டப்பட்ட யுவராஜ் தரப்பு வக்கீலின் தடாலடி கேள்விகளால் நிலைகுலைந்தார்.

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த வெங்கடாச்சலம் - சித்ரா தம்பதியரின் மகனும் பி.இ. பட்டதாரியுமான கோகுல்ராஜ், கடந்த 2015ம் ஆண்டு ஜூன் 24ம் தேதியன்று, நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிபாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜூம், உடன் படித்து வந்த, கொங்கு வேளாளர் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த கல்லூரி தோழி சுவாதியும் காதலிப்பதாக எண்ணிய ஒரு கும்பல் கோகுல்ராஜை ஆணவக் கொலை செய்திருப்பதாக தகவல்கள் பரவின.

இந்த வழக்கில், சந்தேகத்தின்பேரில் சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் எஸ்.யுவராஜ், அவருடைய தம்பி தங்கதுரை, அருள்செந்தில், செல்வக்குமார், குமார் என்கிற சிவக்குமார், கார் ஓட்டுநர் அருண், சங்கர், செல்வராஜ், ஜோதிமணி, ரவி என்கிற ஸ்ரீதர், ரஞ்சித், சதீஸ்குமார், சுரேஷ், பிரபு, கிரி, அமுதரசு, சந்திரசேகர் ஆகிய 17 பேரை திருச்செங்கோடு போலீசார் கைது செய்தனர்.
 

yuv


இவர்களில், யுவராஜ் திருச்சி மத்திய சிறையிலும், மற்றவர்கள் சேலம் மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை கடந்த 30.8.2018ம் தேதி முதல் நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கைது செய்யப்பட்டவர்களில் ஜோதிமணி சொத்துத் தகராறில் அவருடைய கணவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். ஜாமினில் சென்றபோது அமுதரசு தலைமறைவாகிவிட்டார். மற்ற 15 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகி வருகின்றனர்.

ஏற்கனவே கோகுல்ராஜின் தாயார் சித்ராவிடம் அரசுத்தரப்பு சிறப்பு வழக்கறிஞர் கருணாநிதி விசாரணையும், எதிரிகள் தரப்பு மூத்த வழக்கறிஞர் மதுரை கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ குறுக்கு விசாரணையும் நடத்தி முடித்துவிட்டனர்.
 

yuv


இந்நிலையில், இந்த வழக்கின் மூன்றாவது சாட்சியான கோகுல்ராஜின் உடன்பிறந்த அண்ணன் கலைசெல்வன் செப்டம்பர் 4ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அன்று அவர் கடைசியாக கோகுல்ராஜ் அணிந்து சென்ற உடைகளை அடையாளம் காட்டினார். இன்று (செம்டம்பர் 6, 2018) அவரிடயம் யுவராஜ் தரப்பு வழக்கறிஞர் ஜி.கே. என்கிற கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ குறுக்கு விசாரணை நடத்தினார்.

பகல் 12.15 மணிக்கு குறுக்கு விசாரணை தொடங்கியது. குறுக்கு விசாரணையின் சுருக்கமான வடிவம்...

வக்கீல்: கோகுல்ராஜ் கடைசியாக 23.6.2015ம் தேதி வீட்டில் இருந்து கிளம்பியதாக சொல்லி இருக்கிறீர்கள். அன்று இரவு அவர் வீட்டுக்கு வராததால் அவருடைய நண்பர்கள் வீட்டில் தேடினீர்களா?
 

yuv


கலைசெல்வன்: தேடினோம். அன்று இரவு அவனுடைய நண்பர்கள் எங்கள் வீட்டுக்கு வந்தனர். நாங்கள் தேடும்போது உடன் இருந்தனர்.

வக்கீல்: புகார் கொடுக்கும்போது கட்சிக்காரர்கள் உடன் இருந்தார்களா?

கலைசெல்வன்: இல்லை. நாங்கள் மட்டும்தான் சென்றோம்.

வக்கீல்: உங்கள் தம்பி கேஎஸ்ஆர் கல்லூரியில் 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதமே படிப்பை முடித்து விட்டாரா?

கலைசெல்வன்: ஆமாம்.

வக்கீல்: கோகுல்ராஜ் காணாமல் போய் விட்டார் என்று எப்போது தெரியும்?

கலைசெல்வன்: 23.6.2015ம் தேதி இரவு 7 மணி ஆகியும் அவன் வீட்டுக்கு வரவில்லை. அதுகுறித்து நண்பர்களிடம் விசாரித்தேன்.

வக்கீல்: ஓமலூரை தவிர வெளியூர்களில் அவருக்கு நண்பர்கள் இருக்கிறார்களா?

கலைசெல்வன்: அது தெரியாது. கல்லூரியில்தான் நண்பர்கள் இருக்கின்றனர்.

வக்கீல்: 23.6.2015ம் தேதி காலை 10.30 மணியளவில் உங்கள் பர்சில் இருந்த 100 ரூபாய் காணவில்லை என்று உங்கள் தாயாரிடம் கேட்டீர்களா?

கலைசெல்வன்: ஆமாம். கேட்டேன்.

வக்கீல்: கோகுல்ராஜ் பணம் எதுவும் கேட்டானா என்று அம்மாவிடம் கேட்டீர்களா? கலைசெல்வன்: அப்படி கேட்கவில்லை. வக்கீல்: இதுபற்றி போலீசார் தரப்பில் நான்கு முறை விசாரித்தபோதும் கூறினீர்களா?

கலைசெல்வன்: நான்கு முறை அல்ல. சிபிசிஐடி போலீசாரிடம் மட்டும் ஒருமுறை கூறினேன்.

வக்கீல்: கோகுல்ராஜ் உங்களிடம் பணம் எதுவும் கேட்டாரா?

கலைசெல்வன்: இல்லை.

வக்கீல்: கோகுல்ராஜ் அப்போது கஷ்டத்தில் இருந்தார். நீங்களும், தாயாரும் பணம் தராததால் நண்பர்கள் பலரிடம் பணம் வாங்கி இருந்தார். அதனால் நெருக்கடியில் இருந்தார்.

கலைசெல்வன்: தவறு.

வக்கீல்: 23.6.2015ம் தேதி காலை 10.30 மணியளவில், கோகுல்ராஜிக்கு உங்கள் தாயார் போன் செய்தார். ரிங் சென்றது. ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. அடுத்த 5 நிமிடத்தில் அவரிடம் இருந்து வேறு ஒரு நம்பரில் இருந்து போன் வந்தது. அதில் பேசிய கோகுல்ராஜ், நண்பருடன் இருக்கிறேன். நான் வந்து விடுகிறேன் என்று சொன்னது சரிதானா?

கலைசெல்வன்: சரிதான்.

வக்கீல்: உங்கள் தாயாருக்கு போன் பண்ணியதாக சொல்கிறீர்கள். அந்த சிம் கார்டு அம்மாவின் பெயரிதான் உள்ளதா?

கலைசெல்வன்: இருக்கலாம். ஆனால் சரியாக தெரியவில்லை. அம்மாவிடம் இரண்டு நண்பரும், என்னிடமும், தம்பியிடமும் தலா இரண்டு நம்பர்களும் இருக்கிறது... (இவ்வாறு விளக்கம் சொல்லிக்கொண்டு இருந்தபோது வக்கீல், இருக்கு அல்லது இல்லை என்று மட்டும் சொல்லுங்கள் என்றார் காட்டமாக).

இவ்வாறு குறுக்கு விசாரணை தொடர்ந்தது.

மதியம் நடந்த குறுக்கு விசாரணையின்போது, எதிர்தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ, புகாரில் யுவராஜ்தான் உங்கள் தம்பியை கடத்தியதாக சொல்லியிருந்தீர்களா என்று கேட்டதற்கு, கலைசெல்வன் ஆமாம் என்று பதில் அளித்து இருந்தார்.

மேலும் வழக்கறிஞர் ஜி.கே., நான் சொல்கிறேன்... உங்கள் தம்பி கோகுல்ராஜ் 21.6.2015ம் தேதியன்றே காணாமல்போய் விட்டார். அந்த தகவல்களை மறைத்து நீங்கள் புகார் அளித்திருக்கிறீர்கள் என தடாலடியாக கூறினார். அதை மறுத்துப்பேச கலைசெல்வன் எத்தனித்தபோது, நீதிபதி அவரை ஆட்சேபித்தார்.

இதன்பிறகும் வழக்கறிஞர் ஜி.கே., 22.6.2015ம் தேதியே, நீங்களும், திருமாவளவன் கட்சியினர், பகுஜன் சமாஜ் கட்சி, தமிழ்புலிகள்¢ கட்சியினரும் சுவாதியை நிர்ப்பந்தப்படுத்தி அழைத்துச்சென்று போலீசாரிடம் பொய்யாக வாக்குமூலம் அளிக்க வைத்திருக்கிறீர்கள் என்று நான் சொல்கிறேன் என மற்றொரு குண்டை வீசினார்.

இதற்கு கலைசெல்வன் தரப்பில் விளக்கமோ, பதிலோ சொல்ல நீதிபதி அனுமதிக்கவில்லை. மேலும், அப்போது அங்கிருந்த அரசுத்தரப்பு சிறப்பு வழக்கறிஞர் கருணாநிதியும் இதை ஆட்சேபிக்கவோ, குறுக்கிடவோ இல்லை.

எதிர்தரப்பு வழக்கறிஞரின் இதுபோன்ற தடாலடியான கேள்விகள், கருத்துகளால் பல நேரங்களில் கலைசெல்வன் பேச முடியாமல் தடுமாறினார். எச்சில் முழுங்கியபடி சாட்சி கூண்டில் நின்று கொண்டிருந்தார்.

இதையடுத்து சாட்சிகள் விசாரணை செப்டம்பர் 10, 2018ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி கே.ஹெச். இளவழகன் உத்தரவிட்டார். அன்றை தினம் முக்கிய சாட்சியான சுவாதி ஆஜர்படுத்தப்படுவார் எனத்தெரிகிறது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

இயக்குநராக அவதாரமெடுக்கும் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்!

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
All-rounder Yuvraj Singh will be incarnated as a director!

இந்திய கிரிக்கெட்டின் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு வீரர் யுவ்ராஜ் சிங். களத்தில் தவிர்க்க முடியாத ஒரு ஆல் ரவுண்டராகவும், மிகச்சிறந்த பீல்டராகவும் மட்டுமல்லாமல், புற்று நோயால் பாதிக்கப்பட்டு, அந்த பாதிப்புடனேயே 2011 உலகக்கோப்பை விளையாடி, தொடர்நாயகன் விருதையும் பெற்று இந்திய அணி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். ஒரு கிரிக்கெட் வீரராக சாதனை படைத்த வகையிலும், ஒரு நோயாளியாக கேன்சரை எதிர்த்து வென்று மீண்டும் கிரிக்கெட்டில் களம் கண்ட ஒரு வீரர் என்கிற வகையிலும் சமூகத்திற்கு ஒரு உதாரணமான மனிதர் என்றால் அது மிகையாகாது.

அப்படிப்பட்ட யுவ்ராஜ் சிங் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். கிரிக்கெட் பற்றியும் அவ்வப்போது சினிமா பற்றியும் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கங்களில்  அவர் பதிவிடுவது வழக்கம்.

இந்நிலையில், தற்போது ஒரு புதிய அறிவிப்பை தன்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ,“என் படத்தில் நான். நடிகராகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் இருந்து நானே என்னுடைய வாழ்க்கை வரலாறு படத்தை எடுக்கவுள்ளேன். என்னை வாழ்த்துங்கள் நண்பர்களே! இன்னும் ஓரிரு வருடங்களில் என்னை பெரிய திரையில் பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன். மேலும் பல அறிவிப்புகளுக்கு காத்திருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

இது உண்மையா? இந்த பதிவுடன் சேர்த்து ஒரு கிண்டலான ஸ்மைலியையும் பதிவிட்டிருப்பதால் இது ஏப்ரல் 1 முட்டாள்கள் தினத்துக்கான பதிவாகவும் இருக்கலாம் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

Next Story

மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகனுக்கு ஆம்ஸ்ட்ராங் பாராட்டு

Published on 05/06/2023 | Edited on 05/06/2023

 

Armstrong praises senior advocate  mohan

 

கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட யுவராஜுக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். இந்த தீர்ப்புக்கு உறுதுணையாக இருந்த மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகனை பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் சந்தித்து மரியாதை செலுத்தி நன்றி தெரவித்தார். 

 

“பல்வேறு மிரட்டலும் உயிருக்கு அச்சுறுத்தலும் இருந்தபோதும், தன் உயிர் ஒடுக்கப்பட்ட நசுக்கப்பட்ட உரிமை இழந்து வாடும் மக்களின் உரிமைக்காக போனால் போகட்டும் என தன்னுயிரை துச்சமாக நினைத்து எட்டு வருடப் போராட்டங்களுக்கு பிறகு ஒரே சாட்சி பிறழ் சாட்சியாக மாறிவிட்ட பிறகும், விடாமுயற்சியால் உண்மை வெல்லும் என அடுத்தடுத்து தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வாதாடி ஆயுள் தண்டனையை பெற்றுத் தந்துள்ள உங்களுக்கு எங்களின் மனம் நிறைந்த வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம்” என்று இந்தச் சந்திப்பின் போது ஆம்ஸ்ராங் தெரிவித்தார்.