புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக வீடுகளில் கட்டியிருக்கும் ஆடுகள் தொடர்ந்து திருடப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், மாங்காடு, வடகாடு, அணவயல், புள்ளாண்விடுதி, சேந்தன்குடி, நகரம், கொத்தமங்கலம் உள்ளிட்ட பல கிராமங்களில் சில மாதங்களில் பல ஆடுகள் திருடுபோய் உள்ளது. இதேபோல தான் தஞ்சை மாவட்டம், பேராவூரணி பகுதியில் சொர்ணக்காடு, மணக்காடு, சித்தாதிக்காடு உள்பட பல கிராமங்களிலும் தொடர் ஆடு திருட்டுகள் நடந்து வருகிறது. சிலர் காவல்நிலையங்களில் புகார் கொடுத்தாலும் பலர் புகார் கொடுக்கவில்லை.
இந்நிலையில் கடந்த வாரம் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் இரண்டு ஆடுகளை விற்க வந்த தஞ்சை மாவட்டம் சொர்ணக்காடு கிராமத்தைச் சேர்ந்த புதுக்காளியம்மன்கோயில் தெரு, கந்தசாமி என்பவரது மகன் வல்லரசு (27) மற்றும் கொலக்குடி மாந்தோப்பு, மாணிக்கம் என்பவரது மகன் ராமநாதன் (23) ஆகிய இரு ஆடு திருடர்களையும் அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்கள், மணக்காட்டில் திருடிய 2 ஆடுகளையும் பிடித்து கீரமங்கலம் போலீசாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். விசாரணையில் எங்களுக்கெல்லாம் தலைவர் ஆடு கிடை போடும் ஒருவர் தான் என்பதையும் கூறியுள்ளனர்.
அதேபோல இன்று அதிகாலை தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகில் உள்ள சித்தாதிக்காடு கிராமத்தில் ஆடுகளை திருடி மோட்டார் சைக்கிளில் ஏற்றும்போது ஆடு உதறியதால் தவறி விழுந்த இருவரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். மற்ற இருவர் தப்பிச் சென்றுவிட்டனர். ஆடு திருடர்களை பிடித்த பொதுமக்கள் அவர்களிடம் விசாரித்தபோது, இதேபகுதியில் கிடை போட்டுள்ள ஆடுகள் வளர்ப்பவரிடம் வேலை செய்கிறோம் என்றும் எங்களைப் போல புளிச்சங்காடு கைகாட்டியில் இருவர் ஆடு திருடச் செல்வோம், ஆடுகளை திருடிக் கொண்டு செல்ல கூகுள் மேப் பார்த்துக்கொள்வோம் என்றும் கூறியுள்ளனர்.
பிடிபட்டவர்களில் ஒருவன் பண்ருட்டி சண்முகசுந்தரம், மற்றொருவன் கடலூர் ரஞ்சித் என்றும் பெயர்களை கூறியுள்ளனர். ஒருவன் தனது அப்பா பிரமலமான அரசியல்வாதி வீட்டில் வேலை செய்வதாகவும் கூறியுள்ளான். இவர்களை நன்கு கவனித்து விசாரித்த பொதுமக்கள், பேராவூரணி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று பல மணி நேரம் காத்திருந்த பிறகு காவல் நிலையத்திற்கு டிஎஸ்பி வருகிறார் திருடர்களை அழைத்துச் சென்று பிறகு அழைத்து வாருங்கள் என்று ஒரு பொறுப்பான காவல் அதிகாரிகள் அனுப்பியதால் எங்கே அழைத்துச் சென்று பாதுகாப்பது என்று தெரியாமல் ஆடு திருடர்களை மதியம் வரை ஒரு டீ க்கடையில் அமர வைத்து பொதுமக்களே. பாதுகாத்துள்ளனர்.
மதியத்திற்கு பிறகு பல தரப்பிலிருந்து அழுத்தம் கிடைத்த பிறகே பேராவூரணி போலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆடு திருடர்கள் பேரவூரணியில் பிடிபட்ட தகவல் அறிந்தவர்கள் சமூகவலைதளங்களில் பகிர்ந்து வடகாடு, மாங்காடு, புள்ளாண்விடுதி பகுதியில் ஆடுகளை பறிகொடுத்தவர்கள் வேகமாக பேராவூரணி செல்லுங்கள் என்று பதிவிட்ட நிலையில் ஏராளமானவர்கள் சென்றுள்ளனர். சிக்கியிருக்கும் ஆடு திருடர்களை சரியாக விசாரித்தால் எங்கெல்லாம் திருடினார்கள், யாரிடம் விற்றார்கள், இவர்களின் நெட்வொர்க் பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு மொத்தமாக அனைவரையும் பிடிக்கலாம் என்கின்றனர் ஆடுகளை பறி கொடுத்தவர்கள்.