பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு நடந்த நிகழ்வைக் கண்டிக்கும் வகையில் மதுரை பாண்டி கோவிலில் ஆட்டிற்கு காங்கிரஸ் கட்சி பெயர் வைத்து, பின்னர் ஆட்டை வெட்டி விருந்து வைத்தனர் பா.ஜ.க.வினர்.
பிரதமர் நரேந்திர மோடி நீண்ட ஆயுளுடன் நலமுடன் இருக்க வேண்டியும், நேற்று முன்தினம் (05/01/2022) பஞ்சாபில் பாரத பிரதமருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலாக நடந்த நிகழ்விற்கு காரணமான காங்கிரஸ் கட்சியை கண்டிக்கும் வகையில், மதுரை பாண்டி முனீஸ்வரர் கோவிலில் பா.ஜ.க.வின் இளைஞர் அணியின் மாநிலச் செயலாளர் சங்கரபாண்டியன் தலைமையில், இளைஞர் அணியைச் சேர்ந்த பா.ஜ.க.வினர் ஆடு வெட்டி விருந்து வைத்தனர்.
பாண்டி முனீஸ்வரர் சுவாமிக்கு பா.ஜ.க.வினர் பலிகொடுத்த ஆட்டின் தலையில் இந்திய தேசிய காங்கிரஸ் என்ற வாசகம் மற்றும் கைச் சின்னம் அச்சிடப்பட்ட பதாகை கட்டப்பட்டிருந்தது.
இது குறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளரும், பா.ஜ.க.வின் இளைஞர் அணியின் மாநிலச் செயலாளருமான சங்கரபாண்டியன் கூறுகையில், "பாரதப் பிரதமருக்கு உரிய பாதுகாப்பு வழங்க இயலாத காங்கிரஸ் கட்சி இனி இந்தியாவில் எங்கும் இருக்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் இவ்வாறு ஆட்டின் தலையில் காங்கிரஸ் கட்சியின் பெயரையும் ,சின்னத்தையும், பதாகையாக வைத்து வெட்டினோம்" எனத் தெரிவித்தார்.
கரோனா ஊரடங்கு காரணமாக வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிறுக்கிழமை ஆகிய நாட்களில் கோவில்களில் வழிபாடு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதால், பூட்டப்பட்டிருந்த கோவிலின் வெளியே சூடம் ஏற்றி பா.ஜ.க.வினர், பிரதமர் நரேந்திர மோடி நலம் பெற வேண்டி வழிபாடு செய்தனர்.