தமிழ்நாடு முழுவதும் கடந்த வாரம் கரோனா மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. 20 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தவேண்டும் என்ற இலக்குடன் துவங்கப்பட்ட இந்த தடுப்பூசி முகாமில் கடந்த வாரம் 28 லட்சம் பேருக்கு ஒரே நாளில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. மக்களின் இந்த ஆர்வம் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் இரண்டாவது வாரமாக கரோனா மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியுள்ளது. சுமார் 20 ஆயிரம் மையங்களில் நடைபெற உள்ள முகாம்களில் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இரவு 7 மணி வரை நடக்கும் முகாமில் தடுப்பூசி செலுத்தும் பணிகளில் வருவாய், உள்ளாட்சி அமைப்புகள் ஈடுபடுகின்றன. கரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாத மக்கள் அனைவரும் மெகா தடுப்பூசி முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் போன்ற இடங்களில் தடுப்பூசிகள் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு பல்வேறு மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் பரிசுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் 1,600 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த 1,600 தடுப்பூசி முகாம்கள் அமைந்துள்ள இடங்களை www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் கண்டறியலாம். அதேபோல் 044-25384520, 46122300 என்ற எண்களை தொடர்பு கொண்டும் தடுப்பூசி முகாம் குறித்து அறியலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த திருவேற்காட்டில் நடைபெறும் கரோனா தடுப்பு சிறப்பு முகாமில் ஊசி போட்டுக்கொள்ளும் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட இருப்பதாக திருவேற்காடு நகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு நகராட்சியில் 18 வயதுக்கு மேற்பட்டோர் 85 சதவிகிதத்தினர் தடுப்பூசி செலுத்திக்கொண்டு நிலையில், மீதமுள்ள 15 சதவீதத்தினர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த பரிசு அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்ட நிலையில் அனைவருக்கும் பரிசு என்ற அறிவிப்பால் மகிழ்ச்சி அடைந்துள்ளார் மக்கள்.