தமிழகத்தில் இந்த ஆண்டு கண்டிப்பாக பொதுத்தேர்வு நடைபெறும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகக் கரோனா பெருந்தொற்று காரணமாக பொதுத்தேர்வுகள் நடத்த இயலாத சூழ்நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக மாணவர்களுக்கு பொதுத்தேர்வுக்கு முந்தைய தேர்வின் மூலம் மதிப்பெண்கள் வழக்கப்பட்டுவந்தது. தற்போது கரோனா பெருந்தொற்றின் தீவிரம் குறைந்துவரும் நிலையில் கடந்த நவம்பர் ஒன்றாம் தேதி முதல் குறிப்பிட்ட வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு, தற்போது அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு வருகிறார்கள். இந்த ஆண்டு வழக்கம்போல் பொதுத்தேர்வு நடக்குமா என்று மாணவர்கள் இடையே குழப்பமான நிலை காணப்பட்டுவந்த நிலையில் தற்போது தமிழக அரசு அதற்குப் பதிலளித்துள்ளது.
அதன்படி இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷிடம் இந்தக் கேள்வி முன்வைக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர், "தமிழகத்தில் இந்த ஆண்டு நிச்சயம் பொதுத்தேர்வு நடைபெறும். ஏப்ரல் கடைசி வாரத்தில் அல்லது மே மாதம் முதல் வாரத்தில் பொதுத்தேர்வு நடைபெறும். தற்போது தமிழகம் முழுவதும் பாதுகாப்பில்லாத கண்டறியப்பட்டுள்ள 1500 கட்டடங்களை இடிக்கும் பணி துரிதமாக நடைபெற்றுவருகிறது. தமிழகத்தில் பள்ளிகளில் பாலியல் புகார்களை அளிக்க அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டிகள் வைக்கப்படும். மேலும் 14417 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டும் புகார் அளிக்கலாம்" என்றார்.