வீடுகளில் பயன்படுத்தப்படும் மானியமில்லா எல்பிஜி காஸ் சிலிண்டர் விலை கடந்த மாதத்தைக் காட்டிலும் நடப்பு ஏப்ரல் மாதத்தில் 10 ரூபாய் விலை குறைந்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியம் பொருட்களின் விலை கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் முதல் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்தது.
உலகளவில் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியம் பொருட்களை இந்தியாதான் அதிகளவில் இறக்குமதி செய்து வருகிறது. அதனால் இவற்றின் மீது உலகச் சந்தையில் ஏற்படும் அவ்வப்போதைய விலை மாற்றங்கள் இந்தியாவிலும் எதிரொலிக்கும். இந்நிலையில், ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளில் மீண்டும் கரோனா தொற்று வேகமெடுத்துள்ளதால், கடந்த மார்ச் மத்தியில் இருந்து பெட்ரோலியம் பொருட்களின் விலை சற்று குறைந்து வருகிறது. இதனால் இந்தியாவிலும் கடந்த சில நாட்களாக டீசல் லிட்டருக்கு 60 பைசாவும், பெட்ரோல் லிட்டருக்கு 61 பைசாவும் விலை குறைக்கப்பட்டது.
தற்போது, வீடுகளில் பயன்படுத்தப்படும் மானியமில்லா எல்பிஜி காஸ் சிலிண்டர் விலை கடந்த மாதத்தைக் காட்டிலும் நடப்பு ஏப்ரல் மாதத்தில் 10 ரூபாய் விலை குறைந்துள்ளது. இதனால் டெல்லியில் எல்பிஜி சிலிண்டர் விலை 819 ரூபாயில் இருந்து 809 ரூபாயாக சரிந்துள்ளது. இந்தப் புதிய விலை ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. அதன்படி, சேலத்தில் மார்ச் மாதம் 853 ரூபாயாக இருந்த காஸ் சிலிண்டர் விலை, தற்போது 843 ரூபாயாகவும், சென்னையில் 835 ரூபாயில் இருந்து தற்போது 825 ரூபாயாகவும் குறைந்துள்ளது.