திருச்சி மாநகர் பகுதியில் ஆடு, மாடு போன்ற கால்நடைகள் அதிகளவில் வளர்க்கப்பட்டு வருகின்றன. இக்கால்நடைகள் மேய்சலுக்காக சாலையில் ஆங்காங்கே திரியும். இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். மேலும், மேய்சலுக்குத் திரியும் மாடுகள், சாலையின் ஒரத்தில் படுத்துக் கிடப்பதை அவ்வப்போது காணமுடியும். இந்த நிலையில், மர்ம நபர்கள் பீமநகர், சோமரசம்பேட்டை, கே.கே.நகர் உள்ளிட்ட திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில் சாலை ஓரத்தில் இருக்கும் கறவை மாடுகளைத் திருடிச் செல்கின்றனர்.
இதுபற்றி அறிந்த மாட்டின் உரிமையாளர்கள், சி.சி.டி.வி. கேமரா காட்சிகளைச் சேகரித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இருந்தபோதும், தொடர்ந்து மாடுகள் திருடு போவதால், மாடு வளர்ப்பர்கள் இன்று (03.03.2021) திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்தனர்.
இதுகுறித்து மாட்டின் உரிமையாளர்கள் கூறுகையில், “திருச்சி மாநகரில் ஒரு மாதத்தில் 300 மாடுகள் திருடப்பட்டுள்ளன. குறிப்பாக கறவை மாடுகள், ஜல்லிக்கட்டு காளை ஆகியவற்றைத் தேர்வு செய்து திருடர்கள் திருடுகின்றனர். இதில் 4 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் மாடுகளைச் சரக்கு வாகனங்களில் ஏற்றுவது தெரியவந்தது. ஒரு மாடு ரூ.50 அல்லது ரூ.80 ஆயிரத்துக்கு விலைபோகும்.
மாடு திருடும் கும்பலைக் கண்டு, விரட்டிய பொதுமக்களைப் பயங்கர ஆயுதங்களுடன் அந்தக் கும்பல் தாக்கியுள்ளனர். இதுமட்டுமின்றி திருடிய மாடுகளைக் கண்டுபிடிக்க வேண்டும், திருடர்களைப் பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.” எனத் தெரிவித்தனர்.