Skip to main content

புதிய அரசுக்கு பெரும் சவால்.. உடனடி நிதி தேவையில் மருத்துவமனைகள்! 

Published on 07/05/2021 | Edited on 08/05/2021

 

pudukottai

 

தமிழ்நாட்டில் கரோனா தொற்று வேகமாகப் பரவிவரும் நிலையில, கரோனா சிறப்பு சிகிச்சை மையங்களுக்குத் தேவையான மருந்து, ஆக்சிஜன், உணவு ஆகியவற்றில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆனாலும் இருப்பதை வைத்து சமாளித்து வருகிறார்கள். இப்படி ஒரு பேச்சு இருக்கும் நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்த போது...

 

கடந்த ஆண்டு புதுக்கோட்டை ராணியார் மருத்துவமனை, முத்துலெட்சுமி ரெட்டி நினைவு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் கரோனா சிகிச்சை அளிக்கப்பட்டது. அதேபோல அறந்தாங்கி, ஆலங்குடி, இலுப்பூர் போன்ற பல ஊர்களிலும் கவனிப்பு மையங்கள் அமைக்கப்பட்டு பரிசோதனைகளும் சிகிச்சைகளும் வழங்கப்பட்டு தீவிரச் சிகிச்சைக்கு மட்டும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சிகிச்சை மையங்களிலும் கரோனா தொற்றுள்ள நோயாளிகளுக்கு சிக்கன், சூப், புரோட்டின் உணவுகள் மற்றும் தானிய உணவுகள் வழங்கப்பட்டதுடன் அவர்கள் பயன்படுத்த தனித்தனி வாளிகள், குவளைகள், சோப்பு, மாஸ்குகளும் வழங்கப்பட்டது. அதேபோல அரசு மகளிர் கல்லூரியில் சித்தா பிரிவு ஏற்படுத்தி சிறப்பு சிகிச்சையும் சத்தான உணவுகளும் வழங்கப்பட்டது. 

 

இதனால் விரைவிலேயே குணமடைந்து வீடு திரும்பினார்கள். உயி்ரிழப்பும் குறைவாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டில் வேகமாகப் பரவல் இருந்தாலும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு முந்தைய அரசு தேவையான உணவுக்கான நிதி ஒதுக்கீடு செய்யாததால் மருத்துவக் கல்லூரியில் உள்ள உள்நோயாளிகளுக்குத் தயாரிக்கப்படும் உணவுகளை வழங்கி சமாளித்து வருகிறார்கள். இதனால் இவர்களுக்கு சத்தான உணவுகள் கிடைக்கவில்லை. இதனால் கரோனா நோயாளிகளின் உறவினர்கள் நாள்தோறும் 3 நேரத்திற்கும் உணவு வாங்கி வந்து கொடுக்கிறார்கள். இதனால் பலருக்கும் தொற்று ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. புதிய அரசு போர்க்கால அடிப்படையில் உணவுக்கான நிதி ஒதுக்கீடு செய்தால் நல்லது.

 

pudukottai

 

அதேபோல இங்கு 6 ஆயிரம் கி.லி கொள்ளளவு கொண்ட 2 டேங்க்கள் ஆக்ஸிஜனுக்காக உள்ளது. ஆனால் முழுமையாக நிரப்பப்படுவதில்லை. அதாவது சுமார் 450 தீவிர சிகிச்சை பிரிவு படுக்கை இருந்தாலும் 320 படுக்கைகள் ஆக்சிஜன் வசதி செய்யப்பட்டு தயாராக உள்ளது. ஆனால் நேற்று முன்தினம் வரை 85 பேருக்கு ஆக்ஸிஜன் அதிகமாக தேவைப்பட்டுள்ளது. ஒரே நாளில் 3,200 கி.லி தேவைப்பட்டிருந்தது. இதேபோல தினசரி தேவை ஏற்பட்டால் மிகப்பெரிய தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. அதாவது வல்லத்தில் வழக்கமான அளவே தயாரிக்கப்படும் ஆக்சிஜன் திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர் மாவட்ட மருத்துவக் கல்லூரிகளுக்கு தினசரி கொண்டுபோய் நிரப்பப்படுகிறது. ஆனால் கடந்த ஆண்டை விட இப்போது வரும் கரோனா நோயாளிகள் அதிகமானோர் மூச்சுத் திணறலோடு வருகிறார்கள். அதனால் கூடுதல் ஆக்சிஜன் தேவை ஏற்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.

 

அதேபோல உயிர்காக்கும் மருந்துகளும் 3 நாளைக்கு ஒருமுறை வருகிறது. அதுவும் தற்போது போதுமானதாக உள்ளது. இருப்பு வைத்திருக்க முடியாது. ஆனால் தற்போதைய நிலையில் ஒரே நாளில் கூடுதலாகக் கரோனா தொற்று நோயாளிகள் வந்தால் மருந்துகளும் தட்டுப்பாடு ஏற்படும். அதனால் சராசரி உற்பத்தியை விட கூடுதல் உற்பத்தி செய்ய புதிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவமனையில் உள்ள விபரமறிந்தவர்கள். இதே நிலை தான் தமிழகம் முழுவதும் உள்ளது.

 

புதிய அரசு இந்தப் பெரிய சவாலை சமாளித்தால் தான் உயிர்ப் பலிகளைத் தடுக்க முடியும்.


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடைசிவரை பேச்சுவார்த்தை தோல்வி; இறுதிவரை புறக்கணித்த இறையூர் மக்கள்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் தமிழ்நாட்டிலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அதிகமான கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு பதாகைகளை காண முடிந்தது. அதேபோலதான் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி, முத்துக்காடு ஊராட்சி, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடி தண்ணீர் தொட்டியில் மனித கழிவு கலந்த உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரி தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக 502 வாக்காளர்களைக் கொண்ட இறையூர் கிராம மக்கள் பதாகை வைத்தனர்.

அதேபோல இதேகோரிக்கையை வலியுறுத்தி 59 வாக்காளர்களை கொண்ட வேங்கை வயல் கிராம மக்களும் தேர்தல் புறக்கணிப்பு பதாகை வைத்தனர். இந்த பகுதிக்கு எந்த ஒரு வேட்பாளரும் வாக்கு கேட்டு வரவில்லை. திருச்சி நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மட்டும் வந்து சென்ற நிலையில் அவர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இறையூர் மற்றும் வேங்கை வயல் கிராமங்களில் உள்ள 561 வாக்காளர்கள் வாக்களிக்க வேங்கைவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குப்பதிவு மையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில், காலை முதல் வாக்குப் பதிவிற்கு அதிகாரிகள் காத்திருந்த நிலையில் அரசு ஊழியர் வாக்கு ஒன்று பதிவானது, தொடர்ந்து இந்த வாக்குச் சாவடியில் வாக்களிக்க காவேரி நகர் உள்ளிட்ட வெளியூரில் இருந்த சிலர் வந்து வாக்களித்தனர். மதியம் வரை 6 வாக்குகள்  மட்டுமே பதிவாகி இருந்தது.

nn

இரு கிராம மக்களும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். திருச்சி பாராளுமன்றத் தொகுதிக்குட்ட பகுதி என்றபதால் மாலை திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் வந்த அதிகாரிகள் வேங்கைவயல் கிராம மக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர், அப்போது தண்ணீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும். எங்களுக்கு தனியொரு இடத்தில் குடியிருப்பு பகுதி ஏற்படுத்தி வீடுகள் கட்டித்தர வேண்டும், வாழ்வாதாரத்திற்கு விளைநிலம், தொழில் வசதி செய்து தர வேண்டும் என்று பல கோரிக்கைகள் முன் வைத்தனர். இதனைக் கேட்ட அதிகாரிகள் வழக்கு சம்மந்தமாக சிபிசிஐடி விசாரணை நடக்கிறது உங்களுக்கே தெரியும் விரைவில் கைது செய்வார்கள். மற்ற கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம் அதனால் வாக்குப்பதிவு செய்யுங்கள் என்று கூறினர். அதனையடுத்து மாலை 5 மணிக்கு பிறகு வேங்கைவயல் மக்கள் 59 வாக்காளர்களில்  53 பேர் இரவு 7 மணி வரை வாக்களித்தனர்.

அதேபோல இறையூர் கிராம மக்களிடம் அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு சென்ற போது, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்யும் வரை எந்த தேர்தலிலும் வாக்களிக்க மாட்டோம் என்று கூறிவிட்டனர். சொன்னது போல முழுமையாக வாக்குப் பதிவை புறக்கணித்துவிட்டனர். இறையூர் கிராம மக்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. வேங்கைவயல் மக்களின் 53 வாக்குகளுடன் சேர்த்து மொத்தமே 62 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்து இறையூர் மக்கள் முழுமையாக தேர்தலை புறக்கணித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேங்கை வயல் கிராம தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கும் வரை அனைத்து தேர்தல்களையும் புறக்கணிப்போம் என்பதில் இறையூர் கிராம மக்கள் ஒருங்கிணைந்து நிற்கிறோம் என்கின்றனர் இறையூர் மக்கள்.

Next Story

மன்சூர் அலிகானுக்கு தீவிர சிகிச்சை

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்தது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தினர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கிய நிலையில் இன்று மாலை 6 மணியோடு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறந்த பிரச்சாரம் ஓய்ந்தது. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்தத் தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார் மன்சூர் அலிகான். பலாப்பழ சின்னத்தில் போட்டியிடும் அவர், தொடர்ச்சியாகக் காய்கறி மார்க்கெட், மீன் மார்க்கெட் என வேலூர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் அவரது வழக்கமான நக்கல் கலந்த பாணியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இதையடுத்து பிரச்சாரத்தின் கடைசி நாளான இன்று வேலூர் குடியாத்தம் பகுதியில் தீவிர பரப்புரையில் ஈடுபட்ட மன்சூர் அலி கானுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை கே.கே.நகரில் உள்ள மருத்துவமனையில் தற்போது மன்சூர் அலிகான் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.