தமிழ்நாட்டில் கரோனா தொற்று வேகமாகப் பரவிவரும் நிலையில, கரோனா சிறப்பு சிகிச்சை மையங்களுக்குத் தேவையான மருந்து, ஆக்சிஜன், உணவு ஆகியவற்றில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆனாலும் இருப்பதை வைத்து சமாளித்து வருகிறார்கள். இப்படி ஒரு பேச்சு இருக்கும் நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்த போது...
கடந்த ஆண்டு புதுக்கோட்டை ராணியார் மருத்துவமனை, முத்துலெட்சுமி ரெட்டி நினைவு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் கரோனா சிகிச்சை அளிக்கப்பட்டது. அதேபோல அறந்தாங்கி, ஆலங்குடி, இலுப்பூர் போன்ற பல ஊர்களிலும் கவனிப்பு மையங்கள் அமைக்கப்பட்டு பரிசோதனைகளும் சிகிச்சைகளும் வழங்கப்பட்டு தீவிரச் சிகிச்சைக்கு மட்டும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சிகிச்சை மையங்களிலும் கரோனா தொற்றுள்ள நோயாளிகளுக்கு சிக்கன், சூப், புரோட்டின் உணவுகள் மற்றும் தானிய உணவுகள் வழங்கப்பட்டதுடன் அவர்கள் பயன்படுத்த தனித்தனி வாளிகள், குவளைகள், சோப்பு, மாஸ்குகளும் வழங்கப்பட்டது. அதேபோல அரசு மகளிர் கல்லூரியில் சித்தா பிரிவு ஏற்படுத்தி சிறப்பு சிகிச்சையும் சத்தான உணவுகளும் வழங்கப்பட்டது.
இதனால் விரைவிலேயே குணமடைந்து வீடு திரும்பினார்கள். உயி்ரிழப்பும் குறைவாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டில் வேகமாகப் பரவல் இருந்தாலும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு முந்தைய அரசு தேவையான உணவுக்கான நிதி ஒதுக்கீடு செய்யாததால் மருத்துவக் கல்லூரியில் உள்ள உள்நோயாளிகளுக்குத் தயாரிக்கப்படும் உணவுகளை வழங்கி சமாளித்து வருகிறார்கள். இதனால் இவர்களுக்கு சத்தான உணவுகள் கிடைக்கவில்லை. இதனால் கரோனா நோயாளிகளின் உறவினர்கள் நாள்தோறும் 3 நேரத்திற்கும் உணவு வாங்கி வந்து கொடுக்கிறார்கள். இதனால் பலருக்கும் தொற்று ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. புதிய அரசு போர்க்கால அடிப்படையில் உணவுக்கான நிதி ஒதுக்கீடு செய்தால் நல்லது.
அதேபோல இங்கு 6 ஆயிரம் கி.லி கொள்ளளவு கொண்ட 2 டேங்க்கள் ஆக்ஸிஜனுக்காக உள்ளது. ஆனால் முழுமையாக நிரப்பப்படுவதில்லை. அதாவது சுமார் 450 தீவிர சிகிச்சை பிரிவு படுக்கை இருந்தாலும் 320 படுக்கைகள் ஆக்சிஜன் வசதி செய்யப்பட்டு தயாராக உள்ளது. ஆனால் நேற்று முன்தினம் வரை 85 பேருக்கு ஆக்ஸிஜன் அதிகமாக தேவைப்பட்டுள்ளது. ஒரே நாளில் 3,200 கி.லி தேவைப்பட்டிருந்தது. இதேபோல தினசரி தேவை ஏற்பட்டால் மிகப்பெரிய தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. அதாவது வல்லத்தில் வழக்கமான அளவே தயாரிக்கப்படும் ஆக்சிஜன் திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர் மாவட்ட மருத்துவக் கல்லூரிகளுக்கு தினசரி கொண்டுபோய் நிரப்பப்படுகிறது. ஆனால் கடந்த ஆண்டை விட இப்போது வரும் கரோனா நோயாளிகள் அதிகமானோர் மூச்சுத் திணறலோடு வருகிறார்கள். அதனால் கூடுதல் ஆக்சிஜன் தேவை ஏற்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.
அதேபோல உயிர்காக்கும் மருந்துகளும் 3 நாளைக்கு ஒருமுறை வருகிறது. அதுவும் தற்போது போதுமானதாக உள்ளது. இருப்பு வைத்திருக்க முடியாது. ஆனால் தற்போதைய நிலையில் ஒரே நாளில் கூடுதலாகக் கரோனா தொற்று நோயாளிகள் வந்தால் மருந்துகளும் தட்டுப்பாடு ஏற்படும். அதனால் சராசரி உற்பத்தியை விட கூடுதல் உற்பத்தி செய்ய புதிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவமனையில் உள்ள விபரமறிந்தவர்கள். இதே நிலை தான் தமிழகம் முழுவதும் உள்ளது.
புதிய அரசு இந்தப் பெரிய சவாலை சமாளித்தால் தான் உயிர்ப் பலிகளைத் தடுக்க முடியும்.