திருச்சி, திருவெறும்பூர் நவல்பட்டு ஊராட்சி, செல்வன் காலனியில் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் ரூ. 5.25 லட்சம் செலவில் சமூக சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது. மேலும், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் இயக்கத்தில் சிலோன் காலனி, பாரதியார் நகர் பகுதியில் 10 லட்சம் ரூபாய் செலவில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டுள்ளது. அதேபோல ரூ. 11.80 லட்சம் செலவில் 22 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றை மத்திய உணவு பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் மற்றும் நீர் ஆதாரத் துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் நேற்று (26.09.2021) மாலை திறந்துவைத்தார்.
அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “மத்திய அரசின் முக்கிய திட்டமான ‘ஜல் ஜீவன்’ இயக்கத்தின் கீழ், வருகிற 2024ஆம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் குடிநீர் இணைப்புகளை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி இந்த இயக்கத்தை மக்கள் இயக்கமாகவும் செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். முன்பு ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் ஒவ்வொரு மாநிலத்துக்கும் குறிப்பிட்ட அளவு நிதி ஒதுக்கப்பட்டது. தற்போது அந்த முறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மொத்தமாக இந்த இயக்கத்துக்கு ஐம்பதாயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தின் கீழ் பணிகளை மேற்கொள்ள திட்டம் தயாரிக்கும் மாநில அரசு, தனது பங்காக 40 சதவீத தொகையை செலுத்தினால் மத்திய அரசு தனது பங்கான 60 சதவீத தொகையை விடுவிக்கும்.
அந்தந்த மாநிலங்கள் எவ்வளவு நிதி செலுத்துகிறதோ அதற்கேற்றார்போல் மத்திய அரசின் பங்கை பெறமுடியும். தமிழ்நாடு அரசு 2020 - 21ஆம் ஆண்டிற்கான திட்ட அறிக்கையை இன்னும் வழங்கவில்லை. அவற்றை விரைந்து வழங்குமாறு சென்னையில் இன்று நடந்த கூட்டத்தில் அதிகாரிகளுடன் வலியுறுத்தியுள்ளோம். அக்டோபர் மாத இறுதிக்குள் திட்ட அறிக்கையை அளிப்பதாக கூறியுள்ளனர். இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழ்நாடு அரசின் செயல்பாடு சரியாகவே உள்ளது” என்று தெரிவித்தார்.