தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் ஒவ்வொரு ஆண்டும் சிலம்பம், கராத்தே, தடகளம், ஆணழகன் என தொடர் சாதனைகளை நிகழ்த்தும் நிகழ்ச்சிகள் இன்றுவரை தொடர்கிறது. அந்த வகையில், இந்த ஆண்டும் 9 மாத கர்ப்பிணிப் பெண், இரட்டை மற்றும் ஒற்றைச் சிலம்பம் என 6 மணி நேரம் சுற்றிச் சாதித்துள்ளார். அத்துடன் உலக நோபல் ரெகார்டில் இடம் பிடித்தார்.
சிலம்ப பயிற்சியாளரான ஷீலா தாஸ் தன் மாணவர்களைச் சாதிக்கத் தூண்டினாலும், தானும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தொடர்ந்து 6 மணி நேரம் சிலம்பம் சுற்றப் போவதாக அறிவித்தார். இதற்கு, அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி நண்பர்களும், உறவினர்களும் நிறைமாத கர்ப்பிணியாக இருந்து கொண்டு சிலம்பம் சுற்றுவதா? வேண்டாம் என்று கூறியுள்ளனர். தன் மீதான அக்கறையில் அறிவுரைக் கூறிய உறவுகளிடம் நிச்சயம் சாதிப்பேன்; பயப்பட வேண்டாம் என்று கூறி உலக மகளிர் தினத்தைச் சாதிக்கும் நாளாக தேர்வு செய்தார்.
இதற்காக உலக நோபல் ரெக்கார்டு நிறுவனத்திற்கு அழைப்புக் கொடுத்துள்ளார். அதைத் தொடர்ந்து, இன்று (08/03/2022) சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, சாதனைக்கு தயாரான ஷீலா தாஸ், சிலம்பம் சுற்றுவதைத் தொடங்கினார். இதனை சர்வதேச முதியோர் தடகள வீராங்கனை திலகவதி தலைமையில் டாக்டர் குணசேகரன் தொடங்கி வைத்தார். சுமார் 3 மணி நேரம் இரட்டை சிலம்பம், அடுத்த 3 மணி நேரம் ஒற்றைச் சிலம்பம் சுற்றி முடித்தார். இது காண்போரைக் கவர்ந்தது அவரது சிலம்ப சுழற்சி. அதைத் தொடர்ந்து, அவரது சாதனை அங்கீகரித்து, நோபல் சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது.
கர்ப்பிணியானாலும் சாதிக்க எதுவும் தடையில்லை என்கிறார் ஷீலா தாஸ்.