தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வால் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு எட்டாக்கனியாக இருந்த நிலையில், தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு முதல் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கியது. இந்த உள் ஒதுக்கீட்டின் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து 18 அரசுப் பள்ளி மாணவர்கள் பல அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படித்துவருகின்றனர். இதில் கீரமங்கலம் அரசுப் பள்ளிகளில் படித்த 5 மாணவர்களும், செரியலூர் கிராமத்திலிருந்து மட்டும் 3 பேரும் மருத்துவம் படிக்கின்றனர்.
அரசுப் பள்ளியில் படித்து மருத்துவக் கல்லூரிகளுக்கு செல்லும்போது, ஆங்கிலம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக புதுக்கோட்டை கீரமங்கலம் ‘நமது நண்பர்கள் பயிற்சி மையம்’ சார்பில் புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களைச் சேர்ந்த நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 15 மாணவர்களுக்கு குருகுலம் சிவநேசன் ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி அளித்தார்.
அதனால் அந்த மாணவர்கள் கல்லூரிகளில் ஆங்கிலம் என்ற அச்சமின்றி பயின்றுவருகின்றனர். இந்த தன்னார்வ பயிற்சி பற்றி கல்வித்துறை அதிகாரிகளும், பலதரப்பினரும் பாராட்டினார்கள். அதேபோல இந்த வருடமும் நீட்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி வகுப்புகள் தற்காலிகமாக கீரமங்கலம் அருகில் உள்ள அலஞ்சிரங்காடு கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் தொடங்கியுள்ளது. பயிற்சி வகுப்புகளை குருகுலம் சிவநேசன் நடத்திவருகிறார்.
பயிற்சிக்கு புதுக்கோட்டை, ஆவுடையார்கோயில், சிலட்டூர், பெரியாலூர், நெய்வத்தளி, கீரமங்கலம் உள்பட பல ஊர்களில் இருந்தும் மாணவர்கள் வருகின்றனர். மேலும் மாணவர்கள் வர உள்ளதாக கூறப்படுகிறது. இந்த வருட அரசுப் பள்ளி மாணவர்களும் ஆங்கிலம் என்ற அச்சமின்றி கல்லூரிகளுக்கு செல்வார்கள் என்கிறார் பயிற்சியாளர் குருகுலம் சிவநேசன்.