கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையதைச் சேர்ந்த முனியப்பன்(45), கரூர் சீர்காழி ஆகிய பகுதிகளில் நிதி நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். அவருக்கு மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் சொந்த வீடும் உள்ளது. இந்த நிலையில் முனியப்பன் தன் மனைவி கலைவாணி, தாய் பழனியம்மாள், மகள் ஹரிணி, மகன் கார்முகிலன் ஆகியோருடன் காரில் கரூரிலிருந்து சீர்காழிக்கு சென்றுள்ளார்.
பின்பு அங்கிருந்து திரும்பி கரூர் செல்வதற்காக சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்தார். அப்போது, திருமாந்துறை டோல்கேட் அருகே வந்துகொண்டிருந்தபோது, கேரளாவிலிருந்து கெமிக்கல் லோடு ஏற்றி வந்த லாரி ஒன்று முன்னே சென்று கொண்டிருந்தது. திடீரென அந்த லாரி பிரேக் போடவே முனியப்பன் தனது காரை திருப்புவதற்கு முயன்றுள்ளார். அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதியது. அதேநேரத்தில் தூத்துக்குடியிலிருந்து சுண்ணாம்புக்கல் ஏற்றிக்கொண்டு பரங்கிப்பேட்டை நோக்கிச் சென்ற லாரி காரின் பின்னால் வேகமாக வந்து மோதியது. இதில் இரண்டு லாரிகளுக்கும் இடையே சிக்கிய முனியப்பன் கார் அப்பளம் போல் நொருங்கி உருக்குலைந்தது.
இந்த விபத்தில் காரில் பயணித்த முனியப்பன், அவரது மனைவி கலைவாணி, மகள் ஹரிணி, தாயார் பழனியம்மாள் ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சிறுவன் கார்முகிலன் படுகாயங்களுடன் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து மங்களமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.