
திராவிட இயக்கம் தமிழகம் முழுக்க வேர் பரப்பியபோது அதில் தீவிர தொண்டராகப் பணியாற்றி பெரியார், அண்ணா, கலைஞர், பேராசிரியர் அன்பழகன், கி.வீரமணி என எல்லோராலும் பாராட்டப் பெற்றவர், பெரியாரின் பெருந்தொண்டர் என்ற பெயரோடு பயணித்தவர் மொழிப்போர் தியாகி கோபி வெங்கிடு. உடல் நலிவடைந்தபோது, அவருக்கு கரோனா உறுதி படுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் கோவையில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சில நாட்களாக சிகிச்சை பெற்றுவந்தார். சிகிச்சை பலனின்றி இன்று 23.09.2020 மாலை 4 மணிக்கு மருத்துவமனையிலேயே காலமானார். அவருக்கு வயது 83.
தி.மு.க.வில் கொள்கைப் பற்றாளராக வாழ்ந்த ஜி.பி.வெங்கிடு தலைமை பேச்சாளராகவும் இருந்தார். தி.மு.க.வில் உள்ள முன்னணித் தலைவர்கள், நிர்வாகிகள் எல்லோராலும் அறியப்பட்டவர். 1992 இல் ஜெயலலிதாவின் தலைமையிலான ஆட்சி. நமது 'நக்கீரன்' இதழ்மீது பல அடக்கு முறைகளை ஏவியது ஜெ' அரசு. அப்போது அமைச்சராகவும் கோபிசெட்டிபாளையம் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் இருந்த செங்கோட்டையன் உத்தரவின் பேரில் அவரது ஆட்கள் கோபிசெட்டிபாளையத்தில் நக்கீரன் இதழ் எந்தக் கடைகளிலும் விற்கக்கூடாது எனக் கடைகாரர்களை மிரட்டி இதழ்களைப் பறித்து தீ வைத்தனர்.
ஜி.பி.வெங்கிடு கோபிச்செட்டிபாளயம் பேருந்து நிலையத்தை அடுத்த பெரியார் மைதானம் எதிரில் தங்கம் தேனீரகம் என்ற டீ கடையும் அதில் புத்தக விற்பனையும் செய்து வந்தார். கோபிசெட்டிபாளையத்தில் எங்கும் நக்கீரன் இல்லாதபோது, இவர் கடையில் மட்டும் ஸ்டால் போஸ்டர்களுடன் நக்கீரன் விற்பனைக்கு இருந்தது. செங்கோட்டையனின் கூலிப்படை மிரட்டிப் பார்த்தது. ஆனால் ஜி.பி.வெங்கிடோ "எனது கடையில் நக்கீரன் விற்பனை செய்வேன். உன்னால் என்ன செய்ய முடியுமோ செய்துகொள்" எனப் போர் குணத்துடன் பதில் கொடுத்தார். ஒரு கட்டத்தில் அமைச்சரின் கூலிப்படையினர் கூட்டத்தை அதிகமாகச் சேர்த்துவந்து வெங்கிடுவின் தேனீர் கடையை அடித்து நொறுக்கி துவம்சம் செய்தனர். அப்போதும் அசரவில்லை வெங்கிடு. நொறுக்கப்பட்ட கடையில் இருந்தவாரே நக்கீரன் இதழை விற்பனை செய்தார்.

எந்தச் செங்கோட்டையன் தனது கடையை அடித்து நொறுக்கினாரோ அதே செங்கோட்டையனை எதிர்த்து 1996 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.சார்பில் போட்டியிட்டு, மாபெரும் வெற்றி பெற்றார். எம்.எல்.ஏ.வாக இருந்தாலும் மிகவும் எளிமையாக மக்களிடம் பழகினார். தொகுதியில் ஏராளமான நலத் திட்டங்கள் இவர் காலத்தில் செய்துள்ளார். தி.மு.க.வில் இப்படிப்பட்ட எளிமை மிகு கொள்கைவாதிகளை இப்போது காண்பது அரிதுதான்.