மோசடி வழக்கில் தலைமறைவாகி ஓடிஒளிந்தபோது ராஜேந்திரபாலாஜியின் இமேஜ், மிகவும் டேமேஜானது. உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைத்து திருச்சி மத்திய சிறையிலிருந்து வெளிவந்தபிறகு, முக்கிய பிரமுகர்கள் பலரும் ராஜேந்திரபாலாஜியின் திருத்தங்கல் வீட்டுக்கே வந்து சந்தித்து, ‘நாங்க இருக்கிறோம்..’ என்று சால்வை போட்டு ஆறுதலளித்ததும் தெம்பானார்.
மாநிலம் கடந்தும், கைபேசி அழைப்பு மூலம் பல தரப்பினரும் நலம் விசாரிக்க, உற்சாகமானார். இந்த நிலையில், எம்.ஜி.ஆரின் 105- வது பிறந்த நாளை, முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன் உள்ளிட்ட கட்சி பிரமுகர்களுடன் தனது வீட்டில் கொண்டாட, முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், சி.வி.சண்முகம், மாஃபா பாண்டியரஜன் மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், ராஜேந்திரபாலாஜியைச் சந்தித்து, சுமார் ஒன்றரை மணி நேரம் பேசியுள்ளனர்.
அவ்வளவு நேரம் என்ன பேசினார்களாம்?
“பேசுவதற்கு ராஜேந்திரபாலாஜியிடம் விஷயமா இல்லை? தலைமறைவு அனுபவம், சிறை அனுபவம், பொய் வழக்கின் போக்கு என சகலமும் பேசப்பட்டிருக்கும்..” எனச் சொல்லும் அக்கட்சியினர் “சசிகலா குறித்த பேச்சோ, எதிர்காலத் திட்டமோ நிச்சயம் விவாதிக்கப்பட்டிருக்காது. ஏனென்றால், நடந்தது ரகசிய சந்திப்பு அல்லவே!” என்றனர்.
இச்சந்திப்பு முடிந்ததும், “சும்மா ஒரு வார்த்தையாவது பேசுங்க..” என்று மீடியாக்கள் கேட்டுக்கொண்டபோது, வழக்கை காரணம் காட்டி ‘நோ’ சொல்லிவிட்டார் ராஜேந்திரபாலாஜி. அவரைப் போலவே, முன்னாள் அமைச்சர்களும் பேட்டியளிக்காமலே கிளம்பினார்கள்.