தன்னைப் பற்றி அவதூறான கருத்துக்களை வெளியிட்டதற்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக நடிகையின் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
அதிமுக ஆட்சியில் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக இருந்த மணிகண்டனும், தானும் ஒன்றாக வாழ்ந்ததாகவும், தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியதுடன், கட்டாயப்படுத்தி கருகலைப்பு செய்ய வைத்ததாகவும், அந்தரங்க படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டுவதாகவும், திரைப்பட நடிகை (சாந்தினி) சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார்.
இதற்கு விளக்கம் அளித்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன், தனக்கும் அந்த நடிகைக்கும் தொடர்பில்லை என்றும், தன்னிடம் பணம் பறிக்கும் நோக்கத்துடன், நடிகையும், வழக்கறிஞர் சுதன் என்பவரும் பொய்ப் புகார் அளித்ததாக தெரிவித்தார். வழக்கறிஞர் சுதன் தன்னிடம் 3 கோடி ரூபாய் வரை பேரம் பேசியதாகவும் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் தன்னை குறித்து அவதூறு பரப்பியதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு வழக்கறிஞர் சுதன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
தன் மீதான புகார் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று மணிகண்டன் தான், மே 23ஆம் தேதி சென்னையில் தன்னை வந்து சந்தித்து, தனக்கெதிரான நடவடிக்கையை கைவிடவும், சமரசமாக செல்லவும், பணத்தைப் பெற்றுகொள்ளவும் வலியுறுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு நடிகை ஒத்துக்கொள்ளாமல், சட்ட நடவடிக்கையை தொடர அறிவுறுத்திய நிலையில், தனக்கெதிராக மணிகண்டன் அவதூறு பரப்புவதாக வழக்கறிஞர் சுதன் குறிப்பிட்டுள்ளார்.
பணம் பறிக்கும் வகையில் தான் நடந்து கொண்டதாக கூறிய அவதூறு கருத்துக்கு, மணிகண்டன் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அவ்வாறு கேட்காவிட்டால் மான நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்றும் வழக்கறிஞர் சுதன் அனுப்பிய நோட்டீசில் எச்சரித்துள்ளார்.