அ.தி.மு.க.வைச் சேர்ந்த திருப்பத்தூர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணி வீடு மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்குச் சொந்தமான வீடுகள், அலுவலகங்கள், தொழில் நிறுவனங்கள் எனத் தமிழ்நாடு, கர்நாடகாவில் 35 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் செப்டம்பர் 16- ஆம் தேதி காலை முதல் மாலை 06.00 மணி வரை அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனை முடிவுக்கு வந்துள்ள நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரப்பூர்வமாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
அதில், இந்த ரெய்டில் கணக்கில் வராத 36 லட்சத்து ஆயிரத்து 60 ரூபாயும், அமெரிக்க டாலர்கள் 1.80 லட்சம், ரோல்ஸ் ராய்ஸ் உட்பட 9 ஆடம்பர கார்களும், 4 கிலோ 987 கிராம் தங்கமும், 47 கிராம் வைரமும், 7.2 கிலோ வெள்ளி, சொத்து ஆவணங்கள் போன்றவற்றைக் கைப்பற்றியுள்ளதாகக் கூறியுள்ளது.
இதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது, தொடர்ந்து விசாரணை நடைபெறும் என லஞ்ச ஒழிப்புத்துறை அறிவித்துள்ளது.