தமிழ்நாடு அரசின் டெல்லி பிரதிநிதியாக திமுக முன்னாள் எம்.பி, ஏ.கே.எஸ். விஜயன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக முன்னாள் எம்.பி ஏ.கே.எஸ். விஜயன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் இவர் ஏற்கனவே எம்.பி.யாக இருந்துள்ளார். தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் வரும் 17ஆம் தேதி டெல்லி செல்ல உள்ளார். ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக டெல்லி செல்லும் முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடியை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. வழக்கமாக டெல்லி சிறப்பு பிரதிநிதி என்பவர் அமைச்சருக்கு இணையானவர். அவருக்கென்று தலைமைச் செயலகத்தில் ஒரு அறை ஒதுக்கப்படும். டெல்லி விவகாரங்களைப் பார்த்துக்கொள்ளக் கூடிய ஒருவராக டெல்லி பிரதிநிதி இருப்பார். முதலமைச்சர் டெல்லி செல்லும்போது அவரை வரவேற்கக்கூடிய நபர்களில் முக்கிய நபராக டெல்லி பிரதிநிதி இருப்பார். 2004இல் நாடாளுமன்றத்தில் எம்.பி.யாக இருந்த விஜயன், 13வது மற்றும் 14வது லோக்சபாவில் எம்.பி.யாக இருந்துள்ளார். அதேபோல் பல்வேறு காலகட்டத்தில் பல்வேறு நாடாளுமன்றக் குழுக்களில் பங்கேற்றுள்ளார். ஏற்கனவே டெல்டா மாவட்டங்களில் யாருக்கும் அமைச்சர் பதவி கொடுக்கப்படவில்லை என அதிருப்தி இருந்த நிலையில், தற்போது டெல்டா பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு இந்தப் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.