முன்னாள் தமிழக முதல்வர் கலைஞரின் 98- வது பிறந்தநாளையொட்டி தமிழக அரசு இன்று (03/06/2021) முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு இன்று (03/06/2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தென்சென்னையில் ரூபாய் 250 கோடியில் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும். கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் சிறப்பு மருத்துவமனை 500 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்படும். தென் சென்னை மக்கள் பயன்பெறும் வகையில் கிண்டி கிங் மருத்துவமனை பன்னோக்கு மருத்துவமனையாக மாற்றப்படும்.
மதுரையில் ரூபாய் 70 கோடியில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும். திருவாரூரில் ரூபாய் 30 கோடியில் புதிய நெல் கொள்முதல் கிடங்குகள், உலர்களங்கள் அமைக்கப்படும். திருவாரூரில் உள்ள 10 வட்டாரத்தில் 16,000 டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும். 50 சூரிய ஒளி உலர் கிடங்கு, 2 மறுசுழற்சி தொகுப்பு, 2 தொடர் ஓட்ட உலர்விப்பான்களும் அமைக்கப்படும்.
தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில், 'இலக்கிய மாமணி' என்ற விருது உருவாக்கப்படும். தமிழின் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் எழுத்தாளர்கள் மூன்று பேருக்கு ஆண்டுதோறும் 'இலக்கிய மாமணி' விருது வழங்கப்படும். 'இலக்கிய மாமணி' விருதாளர்களுக்கு பாராட்டு பத்திரம் மற்றும் ரூபாய் 5 லட்சம் ரொக்க பரிசும் வழங்கப்படும்.
புகழ்பெற்ற விருதுகளைப் பெற்ற தமிழக எழுத்தாளர்களை ஊக்குவிக்க கனவு இல்லம் கட்டித்தரப்படும். எழுத்தாளர்கள் வசிக்கும் அல்லது விரும்பும் மாவட்டத்தில் தமிழக அரசின் மூலமாக வீடு வழங்கப்படும். திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் நகர்ப்புற அரசு பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம். ஊரடங்கு முழுமையாக விலக்கிக் கொண்ட பின் உரிய உத்தரவு நடைமுறைக்கு வரும்." இவ்வாறு அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.