சிதம்பரம் அருகே வல்லம்படுகை கிராமத்தையொட்டி ஓடும் பழைய கொள்ளிடம் ஆற்றில் முதலைகள் உள்ளன. இந்த முதலைகள் ஆற்றின் ஓரமாக மேய்ச்சலில் ஈடுபடும் கால்நடைகள் மற்றும் பொதுமக்கள் இயற்கை உபாதை கழித்துவிட்டு கை கால்களைக் கழுவும் போதும் வயல்வெளிகளில் வேலை முடிந்து மாலை நேரத்தில் ஆற்றில் குளிக்க முற்படும்போது ஆற்றிலுள்ள முதலைகள் அவர்களைக் கடித்து இழுத்துச் சென்று கொன்று விடுகிறது.
இது போன்ற சம்பவம் இந்தப் பகுதியில் நடந்து பல பேர் முதலைக்கு உயிர்ப் பலி ஆகியுள்ளனர். மேலும் முதலை கடிக்கு ஆளாகி கை கால்களை இழந்தவர்கள் பலர் இன்னும் இந்த பகுதியில் வசிக்கிறார்கள். கடந்த வாரத்திற்கு முன்பு கூட பழையநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த திமுக பிரமுகர் கோபாலகிருஷ்ணன் என்பவர் மாலை நேரத்தில் ஆற்றில் குளிக்கும் போது முதலை இழுத்துச் சென்று கடித்ததால் உயிர் பலியானார். இது போன்ற சம்பவம் அடிக்கடி நடப்பதால் முதலை ஆற்றில் உள்ளது என்றும் யாரும் ஆற்றில் குளிக்கவேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு வனத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் சில இடங்களில் ஆற்றின் கரைகளில் முதலைகளிடமிருந்து பாதுகாக்கும் வகையில் இரும்பு கம்பிக் கூண்டு அமைத்து பொதுமக்கள் குளிப்பதற்கு வனத்துறையினர் ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.
இதனையும் மீறி சில இடங்களில் பொதுமக்கள் அவசரநிலையில் கை கால்களைக் கழுவவும், ஆற்றில் குளிக்கவும் செல்லும் போது முதலையிடம் மாட்டி உயிர்ப் பலியாவதைத் தடுக்கும் விதமாக வியாழக்கிழமையன்று கடலூர் மாவட்ட வன அலுவலர் செல்வம் உத்தரவின் பேரில் சிதம்பரம் வனச்சரக அலுவலர் செந்தில் குமார் தலைமையில் வனவர் அஜிதா, வனக்காப்பாளர் அனுசுயா, சரளா உள்ளிட்ட வனத்துறையினர் பழைய கொள்ளிடம் ஆற்றையொட்டியுள்ள பழையநல்லூர், அகரநல்லூர், வேளக்குடி ஆகிய கிராமங்களில் பழைய கொள்ளிடம் ஆற்றில் முதலை உள்ளது பொதுமக்கள் எக்காரணம் கொண்டு ஆற்றில் இறங்கிக் குளிக்கவோ, கை கால்கள் கழுவவோ இறங்கக்கூடாது என்றும் மீறி இறங்கினால் முதலை கடிக்கு ஆளாகி உயிர்பலி ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் முதலை குறித்த துண்டுப் பிரசுரத்தை அப்பகுதியில் உள்ள கிராம பொது மக்களுக்கு வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.