திருச்சி, பிஷப் ஹீபர் கல்லூரியில், உணவு பாதுகாப்புத் துறையின் சார்பில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற உணவு திருவிழாவில், உணவு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உலக சாதனை நிகழ்வாக 1,12,102 பேரிடம் உறுதிமொழியேற்று கையெழுத்து பெறப்பட்டது. அந்த சாதனையானது TRIUMPH உலக சாதனை பட்டியலில் இடம்பெற்று அதற்கான சான்றிதழ் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமாரிடம் வழங்கப்பட்டது.
இரண்டு நாள் திருவிழாவில் முதல் நாள் காலையில் வாக்கத்தான் போட்டியானது நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டு நடந்து சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.
மேலும் உணவு பாதுகாப்பு குறித்து பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அவா்களுக்கு பேச்சு போட்டி, ஓவியப் போட்டி, கட்டுரைப்போட்டி, குறும்பட போட்டி உள்ளிட்டவைகள் நடத்தப்பட்டன. விழிப்புணர்வுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
மேலும் உணவுத் திருவிழாவில் உணவு பாதுகாப்பு குறித்து பல்வேறு புகைப்படங்களுடன் கூடிய கண்காட்சி அமைக்கப்பட்டு பாதுகாப்பான உணவுகளை எப்படி நுகர்வோர்களுக்கு வழங்க வேண்டும் என்பது குறித்தும், உணவுப் பொருட்களை எப்படிப் பாதுகாக்கலாம் என்றும் விளக்கிக் கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. உணவு பாதுகாப்பு குறித்த பட்டிமன்றம் நடைபெற்றது.
இந்த உணவு பாதுகாப்பு திருவிழாவில் 70 வகையான இயற்கையாக தயாரிக்கப்பட்ட உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டு, அது விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது.