Skip to main content

தென் மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு; அதிகாரிகளுக்கு முதல்வர் முக்கிய அறிவுறுத்தல்!

Published on 14/12/2024 | Edited on 14/12/2024
Flooding in southern districts CM important instructions to the officers

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிகத்தீவிரமாக உள்ளது. இதன் காரணமாகத் தமிழகம் முழுவதும் பரவலாகக் கனமழை பெய்து வருகிறது. அதே சமயம் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடந்த 3 நாட்களாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, திருநெல்வேலி. தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை முதல் அதி கனமழை பதிவானதன் காரணமாக, தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனையொட்டி தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நேற்று (13.12.2024) முதல் கனமழை பெய்து வருவதால், மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு  மேற்கொண்டார். அப்போது திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக, கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரண பணிகள் குறித்தும் கேட்டறிந்தார். அதோடு அதிகாரிகளுக்கு தேவையான அறிவுரைகள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (14.12.2024) சென்னை தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

அப்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், அணைகளின் நீர் இருப்பை கண்காணிக்க வேண்டும். அணைகளிலிருந்து நீரினை திறந்துவிடும் போது பொதுமக்களுக்கு உரிய முன்னெச்சரிக்கை விடுக்க வேண்டும். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் முன்னதாகவே தங்க வைக்க வேண்டும். கனமழையால் ஏற்பட்ட பயிர் சேத விவரங்கள் உட்பட அனைத்து சேத விவரங்களையும் துரிதமாக கணக்கிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அறிவுறுத்தினார். ஏற்கனவே அமைச்சர்கள் கே.என். நேருவும், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனும் திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்து துரிதப்படுத்தி வருகின்றனர். மாவட்டங்களுக்கென நியமிக்கப்பட்டுள்ள.  கண்காணிப்பு அலுவலர்களும் தொடர்புடைய மாவட்டங்களில் முகாமிட்டு மாவட்ட நிருவாகத்துடன் ஒருங்கிணைந்து நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மீட்புப் பணியில் மாவட்ட நிருவாகத்திற்கு உதவிப்புரியும் வகையில் திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு தலா ஒரு குழு வீதம், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 3 குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதுமட்டுமன்றி, தேசிய பேரிடர் மீட்புப் படையின் ஒரு குழு திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அந்தமான் கடல் பகுதியில் நாளை (15.12.2024) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என அறிவித்துள்ளது. அதன் காரணமாக, தமிழ்நாட்டில் ஏற்படவுள்ள மழை குறித்தும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விவாதித்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்தக் கூட்டத்தில், அமைச்சர் துரைமுருகன் மற்றும் ராஜேஷ் லக்கானி, க. மணிவாசன், பெ. அமுதா, அபூர்வா, சத்யபிரத சாகு உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

சார்ந்த செய்திகள்