காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கர்நாடகாவில் கபினி, கே.எஸ்.ஆர் அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் கர்நாடகா அணைகளிலிருந்து திறந்து விடப்படும் நீரின் அளவானது 2 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 1.80 லட்சம் ஆக குறைந்துள்ளது. இதனால் காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. இதுவரை 42 முறை முழு கொள்ளளவை மேட்டூர் அணை எட்டியுள்ளது. இதனால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
அதேபோல் திருவாரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றங்கரையோரம் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி அறிவுறுத்தி உள்ளார். நீர்நிலைகளில் சிறார்கள் குளிக்கச் செல்லும் போது பெற்றோர் கண்காணிக்க வேண்டும். திருவிழாக்களின் போது மக்கள் அதிகம் கூடும் நீர்நிலை பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும், நீர்நிலை பகுதிகளில் பாதிக்கக்கூடிய பகுதிகளைக் கண்டறிந்து காவல்துறையினர் ரோந்து செல்ல வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். அதேபோல் புதுச்சேரியில் தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியின் பாகூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கொம்யூன் பஞ்சாயத்து அறிவுறுத்தி உள்ளது. சாத்தனூர் அணை முழு கொள்ளளவு எட்டி உள்ள நிலையில் தண்ணீர் திறக்கப்படுவதால் இந்த வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.