தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியதிலிருந்து பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் சென்னை உட்பட 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதி மற்றும் இலங்கை அதனை ஒட்டியுள்ள மன்னார் வளைகுடா கடல் பகுதி, குமரி கடல் பகுதிகளில் சுழல் காற்றானது 45 கிலோமீட்டர் முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதாலும், கடல் பகுதியில் கனமழை பெய்யக்கூடும் என்பதாலும் முன்னெச்சரிக்கை காரணமாக மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல் கொடுத்துள்ளது.
தூத்துக்குடியில் மீன்வளத்துறை சார்பில் மறு அறிவிப்பு வரும் வரை விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது, இதனால் சுமார் 5000 படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, இதேபோல் ராமேஸ்வரத்திலும் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என்ற அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளதால் மீனவர்கள் கடலுக்குச் செல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.