சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன் பிடிக்க அனுமதிக்கக் கோரி, தமிழகத்தில் கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் உள்ள மீனவர்கள் தங்களது குடும்பத்தினருடன் சாலை மறியல் போராட்டம், உண்ணாவிரதம் போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றன.
மயிலாடுதுறை மாவட்டத்தில் சுருக்குமடி வலைக்கு அனுமதிக்கோரி கடந்த மூன்று நாட்களாக மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 13 மீனவ கிராம பிரதிநிதிகளுடன் மாவட்ட ஆட்சியர் லலிதா தலைமையில் பேச்சுவார்ததை நடைபெற்றது. அப்போது, 21 வகையான மீன்பிடி ஒழுங்குமுறை சட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் கூறியதையடுத்து உடன்பாடு எட்டப்பட்டது. இருப்பினும், மீன்வளத்துறை அதிகாரிகள் நேரில் சந்தித்து உறுதி தந்தால் உண்ணாவிரதம் கைவிடப்படும் என மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
கடலூர் மாவட்டம், தேவனாம்பட்டினத்தில் சுருக்குமடி வலைக்கு அனுமதிக்கோரி மீனவ பெண்கள் 8 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. சென்னை- வேளாங்கண்ணி சாலையில் நடைபெற்று வரும் சாலை மறியலால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
மீனவர்கள் கூறுகையில், "பல ஆண்டுகளாக சுருக்குமடி வலையைப் பயன்படுத்துகிறோம். அரசு நடவடிக்கை எடுக்காவிடில் போராட்டத்தைத் தீவிரப்படுத்தப்படும்" எனத் தெரிவித்தனர்.