திருச்சி நம்பர் 1 டோல்கேட் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவர், தனது மனைவிக்கு வேலைக்காக இணையதளத்தில் பதிவு செய்து வைத்திருந்தார். இந்த நிலையில் ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் பேப்பள்ளி பகுதியைச் சேர்ந்த ரவிசங்கர்(27) என்பவர் இணையதளம் மூலம் கிருஷ்ணகுமாருக்கு அறிமுகமாகியுள்ளார். மேலும், கிருஷ்ணகுமாரிடம் போனில் பேசிய ரவிசங்கர், “உங்கள் மனைவிக்கு பிரபல தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கி தருகிறேன்” என்று உறுதி கூறியுள்ளார். அதற்காக கொஞ்சம் தொகை முன்பணமாக கட்ட வேண்டும் என கேட்டுள்ளார். இதேபோல், பல முறை கிருஷ்ணகுமார் பணம் கட்டியுள்ளார்.
அதன்படி கிருஷ்ணகுமார், பல தவணைகளாக சுமார் ரூ. 29 லட்சம் வரை கொடுத்துள்ளார். ஆனால் ரவிசங்கர் வேலையை வாங்கி கொடுக்கவில்லை. அதன்பிறகு ஒரு கட்டத்தில் தான் ஏமாற்றப்படுவதை உணர்ந்த கிருஷ்ணகுமார், தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார். அப்போதும் ரவிசங்கர், பணத்தை கொடுக்கவில்லை. அதனால், ரவிசங்கரை நேரில் சென்று சந்திக்க கிருஷ்ணகுமார் முடிவு செய்து ஆந்திரா சென்றுள்ளார். ஆனால், ரவிசங்கரை சந்திக்க முடியாமல் திரும்பிவந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, இது குறித்து திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் கிருஷ்ணகுமார் புகார் கொடுத்தார். அதன்பேரில் காவல் ஆய்வாளர் அன்புசெல்வம் தலைமையிலான போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். மேலும் ரவிசங்கரை பிடிக்கவும் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் ஆந்திர மாநிலம் சென்று அங்கு பதுங்கியிருந்த ரவிசங்கரை கைது செய்து திருச்சிக்கு அழைத்து வந்தனர். விசாரணைக்கு பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு முசிறி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.