இந்த வருடத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில், முதல் நாளிலேயே சட்டப்பேரவை வளாகத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அரசு தயாரித்து கொடுத்த உரையில் சில வார்த்தைகளை தவிர்த்துவிட்டு ஆளுநர் பேசியதும், அதற்கு எதிராக தமிழக முதல்வர் தீர்மானத்தை முன்மொழிந்த போது, ஆளுநர் அவையை விட்டு உடனடியாக வெளியேறியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இதனைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் ஆளுநர் குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், திமுகவில் உள்ள சிவாஜி கிருஷ்ணமூர்த்தி என்ற பேச்சாளர் ஆளுநர் குறித்து அவதூறாகப் பேசியதாக ஆளுநரின் துணைச் செயலர் சென்னை மாநகர காவல்துறையில் புகார் ஒன்றை அளித்திருந்தார். இந்த புகார் தொடர்பாக காவல்துறை சார்பில் சட்ட ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சட்ட ஆலோசனைக்கு பிறகு தமிழக அரசுக்கு சென்னை மாநகர காவல் துறை வேண்டுகோள் ஒன்றை விடுத்திருக்கிறது. அவதூறாகப் பேசிய விவகாரம் தொடர்பாக அவதூறு வழக்கினை நீதிமன்றத்தின் மூலமாக தொடருமாறு தமிழக அரசுக்கு காவல்துறை கோரிக்கை வைத்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விருகம்பாக்கம் பகுதியில் நடைபெற்ற பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி என்ற திமுகவின் பேச்சாளர் தமிழக ஆளுநர் குறித்து அவதூறான வகையில் பேசிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி இருந்த நிலையில் இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தகுந்தது.