தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு 430 கி.மீ. தென்கிழக்கில் மையம் கொண்டிருந்தது. இது நகரும் வேகம் 10 கி.மீ. இல் இருந்து 9 கி.மீ. ஆகக் குறைந்தது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது. அதோடு தமிழகத்தில் இன்றும் (29.11.2024), நாளையும் (30.11.2024) ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது. இதனால் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்படுகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
முன்னதாக வானிலை ஆய்வு மையம் சார்பில் நேற்று (28.11.2024) வெளியிடப்பட முன்னெச்சரிக்கை அறிவிப்பில், ‘தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நவம்பர் 30ஆம் தேதி காலை காரைக்காலிற்கும் மகாபலிபுரத்திற்கும் இடையே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகக் கரையைக் கடக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இத்தகைய சூழலில் தான் வங்கக்கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 3 மணிநேரத்தில் புயலாக வலுப்பெறக் கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது.
இந்நிலையில் வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப் பெற்றுள்ளது. இதற்கு பெங்கல் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த பெயரைச் சவுதி அரேபியா பரிந்துரைத்துள்ளது. இந்த புயல் நாளை (30.11.2024) பிற்பகல் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.