நகைச்சுவை நடிகர் விவேக் மரணத்திற்கு கரோனா தடுப்பூசி காரணமல்ல என மத்திய வல்லுநர் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.
கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு நகைச்சுவை நடிகர் விவேக் (59) திடீர் நெஞ்சுவலி காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி அதிகாலை சுமார் 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.
இந்த சம்பவத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட இரண்டு நாட்களில் நடிகர் விவேக் உயிரிழந்தது பேசுபொருளானது. கரோனா தடுப்பூசி பாதுகாப்பற்றது என்ற அச்சமும் நிலவியது. அதனையடுத்து தடுப்பூசியால் ஏற்படும் தாக்கங்களை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட வல்லுநர் குழு, இது தொடர்பாக ஆய்வு செய்தது. விவேக்கின் உயிரிழப்புக்கு ஏப்ரல் 15ஆம் தேதி அவர் செலுத்திக்கொண்ட கோவாக்சின் காரணமில்லை என மத்திய ஆய்வுக் குழு தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதனால் கரோனா தடுப்பூசி பாதுகாப்பானது என்பதை மத்திய அரசு மீண்டும் உறுதிசெய்துள்ளது.