Skip to main content

மகனின் வெறிச்செயலால் இறந்த தந்தை:... பதறிய உறவினர்கள்!

Published on 15/06/2021 | Edited on 15/06/2021

 

Father who passed due to son's hysteria: shocked relatives

 

அரூர் அருகே, சொத்து தகராறில் தந்தையின் தலைமீது அம்மிக்கல்லைப் போட்டு கொடூரமாக கொலைசெய்த மகனைக் காவல்துறையினர் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள வேப்பம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட வெளாம்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயராமன் (80). விவசாயியான இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி சின்னகண்ணு (67). இவர்களுக்கு வெங்கடேசன் (37) என்ற மகனும், சென்னம்மாள் (32) என்ற மகளும் உள்ளனர். இவருடைய இரண்டாவது மனைவி கோவிந்தம்மாள் (65) என்பவருக்கு பழனி (30), ராமன் (27) ஆகிய இரு மகன்களும், வேடியம்மாள் என்ற மகளும் உள்ளனர். மகளுக்குத் திருமணமான நிலையில், கோவிந்தம்மாள் தனது இளைய மகன் ராமனுடன் கோவையில் வசித்துவருகிறார். 

 

மூத்த மகன் பழனி, உள்ளூரில் வசிக்கிறார். வேலைக்குச் செல்லாமல் இருந்துவருகிறார். ஜெயராமன், அதே ஊரில் தனியாக ஒரு குடிசை அமைத்து வசித்துவந்தார். இவருக்குச் சொந்தமாக 9 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தைப் பாகம் பிரிப்பது தொடர்பாக ஜெயராமனுக்கும், இரண்டாவது மனைவியின் மகன் பழனிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ஊர் பஞ்சாயத்தார் முன்னிலையில் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியபோதும், நிலத்தைப் பாகம் பிரித்துத்தர ஜெயராமன் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் ஆத்திரத்தில் இருந்த பழனி, ஜூன் 13ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில், ஜெயராமன் தங்கியிருந்த வீட்டிற்குச் சென்றார். அங்கு அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த தந்தையை அரிவாளால் தலை, கைகளில் சரமாரியாக வெட்டியுள்ளார். 

 

மேலும், அவருடைய தலை மீது அம்மியின் குழவிக்கல்லைப் போட்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் ஜெயராமன் பலியானார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். ஊர்மக்கள் கூடியதைப் பார்த்ததும், அங்கிருந்து பழனி தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த அரூர் காவல் நிலைய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.  இந்நிலையில், உள்ளூரில் உறவினர் ஒருவரின் வீட்டில் பதுங்கியிருந்த பழனியை ஜூன் 13ஆம் தேதி காவல்துறையினர் கைது செய்தனர். சொத்துத் தகராறில் தந்தையைக் கொலை செய்ததாக பழனி வாக்குமூலம் அளித்துள்ளார். இந்தச் சம்பவம் வெளாம்பட்டி சுற்றுவட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இஸ்ரேல் - ஹமாஸ் தற்காலிக போர் நிறுத்தம் அமல்

Published on 24/11/2023 | Edited on 24/11/2023

 

Israel-Hamas issue temporary stop Enforces

 

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே ஒரு மாதத்திற்கும் மேலாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே காசாவை சுற்றி வளைத்து தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே இஸ்ரேல் நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது.

 

தரைவழித் தாக்குதலைத் தீவிரப்படுத்திய இஸ்ரேல் கிட்டத்தட்ட அனைத்து தொலைத்தொடர்பு சேவைகளை அழித்து உலகத்திலிருந்து காசாவை தனிமைப்படுத்தியுள்ளது. ஹமாஸ் அமைப்பினரை ஒருவர் விடாமல் அழிக்க நினைக்கும் இஸ்ரேலின் தாக்குதலில் ஆயிரக்கணக்கான அப்பாவி பாலஸ்தீன மக்கள் தினந்தோறும் கொல்லப்பட்டு வருகின்றனர். அதில் 60 சதவீதம் பேர் பெண்களும், குழந்தைகளும் எனக் கூறப்படுகிறது. இரு தரப்பிற்கும் இடையிலான இந்தப் போரில் பலரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போரை நிறுத்த உலக நாடுகள் கோரிக்கை வைத்து வருகின்றன.


இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புடன் தற்காலிக போர் நிறுத்தம் செய்துகொள்ள இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. 46வது நாளாகப் போர் நீடித்து வந்த நிலையில், காசாவில் பிணைக் கைதிகளாக உள்ள 50 பெண்கள், குழந்தைகளை விடுவிக்கத் தற்காலிக போர் நிறுத்தம் மேற்கொண்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்திருந்தார். 

 

இதனிடையே, இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான 4 நாள் போர் நிறுத்தம் நேற்று (23-11-23) காலை முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் அந்த அறிவிப்பு தள்ளிப்போனது. பிணைக் கைதிகள் மற்றும் பாலஸ்தீன கைதிகளை விடுவிப்பது குறித்து பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருவதால் போர் நிறுத்தம் தள்ளிப்போவதாக இஸ்ரேல் கூறியிருந்தது. இது குறித்து இஸ்ரேலின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் டாச்சி ஹானெக்பி கூறுகையில், “இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே, பிணைக்கைதிகளின் விடுதலை வெள்ளிக்கிழமை (24-11-23) முன்பாக நடைபெறாது. இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பு இடையேயான் ஒப்பந்தத்தின்படி பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள்” என்று கூறியிருந்தார். 

 

இந்த நிலையில், இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான தற்காலிக போர் நிறுத்தம் இன்று (24-11-23) முதல் அமலுக்கு வந்துள்ளது. இஸ்ரேல் நேரப்படி இன்று காலை 10 மணி முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. போர் நிறுத்தம் 4 நாட்கள் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

Next Story

நியோமேக்ஸ் மோசடி வழக்கு; விசாரணை அதிகாரிகளை எச்சரித்த நீதிபதி

Published on 19/09/2023 | Edited on 19/09/2023

 

Neomax  case; The judge warned the authorities

 

நியோமேக்ஸ் எனும் நிதி நிறுவனம் நடத்தி பல்லாயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு தொடர்பான வழக்கில் விசாரணை அதிகாரிகள் முறையான விசாரணை மேற்கொள்ள வேண்டும். விசாரணை அதிகாரிகளின் தொலைப்பேசி தொடர்புகள் தேவைப்பட்டால் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு நியோமேக்ஸ் என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்திற்கு சுமார் 20க்கும் மேற்பட்ட கிளை நிறுவனங்களும் உள்ளன. அதிக வட்டி தருவதாகக் கூறி மக்களிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்யப்பட்டது. இந்த மோசடி தொடர்பாக நெல்லை, பாளையங்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு கிளைகளை நிர்வகித்து வந்த நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் முக்கிய சில நபர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் தாக்கல் செய்துள்ள மனுவில், மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கில் விசாரணை அதிகாரிகள் சிலர் ஒருதலையாக உள்ளனர் எனச் சந்தேகம் வருகிறது. எனவே இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

 

இந்த வழக்கு நீதிபதி கே.கே. ராமகிருஷ்ணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், ‘இதுவரை முக்கிய குற்றவாளிகளைக் கைது செய்யவில்லை. கைது செய்யப்பட்ட சிலர் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்’ எனத் தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பு வழக்கறிஞர், ‘முக்கியமான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்’ எனத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பிரதான குற்றவாளிகளை இதுவரை கைது செய்யாதது ஏன் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, விசாரணை அதிகாரிகளின் தொலைப்பேசி தொடர்புகள் தேவைப்பட்டால் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.