கடலூர் மாவட்டம், பெண்ணாடம் இறையூர் பகுதியில் அம்பிகா சர்க்கரை ஆலை பல ஆண்டுகளாக மூடிக் கிடக்கிறது. அந்த ஆலையை தமிழக அரசே ஏற்று நடத்த கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். போராடும் விவசாயிகள் கூறியதாவது, " இந்த சர்க்கரை ஆலை, கடந்த ஐந்து ஆண்டுகளாக 22,000 கரும்பு உழவர்களுக்கு 116 கோடி நிலுவைத் தொகைப் பாக்கி வைத்துள்ளது. மேலும் கரும்பு உழவர்களின் அறியாமையைப் பயன்படுத்தி பல வங்கிகளில் சுமார் 200 கோடிக்கு மேல் கரும்பு விவசாயிகள் பெயரில் கடன் வாங்கி உள்ளது. இந்நிலையில் ஆலை நிர்வாகம் ஆலையை மூடிவிட்டது.
இந்த ஆலையில் பணி செய்து வந்த தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். அவர்களுக்கு சம்பள பாக்கி நிலுவையில் உள்ளது. ஆலைத் தொழிலாளர்கள் தங்கியிருந்த வீடுகளை காலி செய்து பலவந்தமாக வெளியேற்றிவிட்டனர். இவ்வளவு நடந்தும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த ஐந்தாண்டு காலமாக பல்வேறு இயக்கங்கள் விவசாய சங்கங்கள் தொழிலாளர் சங்கங்கள் போராடியும், கரும்பு விவசாயிகளுக்கும், ஆலை தொழிலாளிகளுக்கும் நீதி கிடைக்கவில்லை.
எனவே தான் விவசாயிகள் தொழிலாளிகளின் நலன் கருதி அம்பிகா சர்க்கரை ஆலையை தமிழ்நாடு அரசு ஏற்று நடத்திட வேண்டும் என 11-06-2022 இன்று காலை 10 மணி முதல் அம்பிகா ஆலை முன்பு தமிழக உழவர் முன்னணி பொறுப்பாளர் க.முருகன் தலைமையில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டம் தொடர்ந்து நடைபெறும். இவ்வாறு அவர்கள் கூறினர்.